தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே சில இடங்களில் பிரச்னைகள் வெடித்தன. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர் ராயபுரத்தில் கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, நபர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில் மக்கள் நேற்று வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். ஆளுங்கட்சியினர் யாரும் கள்ள வாக்குகளைச் செலுத்தி விடக்கூடாது என்பதில் முனைப்புக் காட்டிய அதிமுக-வினர், அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு அருகில் முகாமிட்டிருந்தனர். அப்போது அவர்கள் நபர் ஒருவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி சுற்றிவளைத்தனர். இந்த தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர், அங்கிருந்த அதிமுக-வினரிடம் அந்த நபரின் கைகளைக் கட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார். அதையடுத்து, அதிமுக-வினர் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. மேலும், இது தொடர்பான வீடியோ ஜெயக்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்திலும் லைவ் செய்யப்பட்டது. கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறப்படும் நபரை ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர் அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், “முன்னாள் அமைச்சராக இருந்த ஒருவரே இப்படி பொதுவெளியில் அநாகரிகமான முறையில் நடந்துகொள்ளலாமா? சட்டத்தைக் கையிலெடுத்து ஒருவரைத் தண்டிக்க ஜெயக்குமார் யார்?” என பல்வேறு தரப்பினரும் ஜெயக்குமாரின் செயலுக்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். “அந்த நபர் ஏற்கெனவே காமராஜர் பள்ளியில் வாக்கு செலுத்திவிட்டார். பின்னர் மீண்டும் அப்பாசாமி பள்ளிக்குக் கள்ள வாக்கு செலுத்த வந்திருந்தார். அப்போதுதான் எங்கள் கட்சி நிர்வாகிகள் அந்த நபரை மடக்கி விசாரித்தனர். அந்த நபர் ஒவ்வொரு தேர்தலிலும் கள்ள வாக்கு செலுத்துவதையே தன் வழக்கமாகக் கொண்டிருப்பவர். அந்த வகையில், நேற்றும் அப்படி வரும்போது எங்களிடம் மாட்டிக்கொண்டார். அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் இருக்கின்றன. மேலும், நேற்றுகூட அந்த நபர் கள்ள வாக்கு செலுத்த வந்ததாகப் புகாரும் பதியப்பட்டிருக்கிறது. அதனால்தான், அந்த நபரைப் பிடித்து போலீஸில் ஒப்படைக்க முயன்றோம்.
அப்போது, அந்த நபர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை உடன் வைத்திருக்கக் கூடும் என்பதால்தான், பிடித்து கையைக் கட்ட முயன்றோம். ஆனால், அந்த நேரத்தில் கையைக் கட்டுவதற்கு எதுவும் இல்லை. அதனால், தற்காப்புக்காகத் தான் சட்டையைக் கழற்றி கையைக் கட்டினோம். அந்த நபரால் யாருக்கும் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்படிச் செய்தேன். அப்போதுகூட, எங்கள் கட்சியினரிடம் அந்த நபரைத் தாக்காதீர்கள் என்றுகூறிக்கொண்டே இருந்தேன். பின்னர், காவல்துறையினரிடம் ஒப்படைத்து விட்டோம். அவர்களும் விசாரித்து எச்சரித்து அனுப்பிவிட்டனர். அந்த நபர் யாரையும் தாக்கி விடக்கூடாது என்பதால்தான் அவரின் கைகளைக் கட்டினோமே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” என்றார்.