இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கோயில்களில் நிரப்பப்படாமல் உள்ள அறங்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், இந்த நியமனங்களை கண்காணிக்க முன்னாள் நீதிபதி தலைமையில், அறநிலையத் துறைஅதிகாரிகள் அடங்கிய குழுவைஅமைக்கக் கோரியும் ரங்கராஜன்நரசிம்மன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்தவழக்கு மீதான விசாரணை நடந்தது.
மனுதாரர் குற்றச்சாட்டு
அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘கோயிலை நிர்வகிக்கும் நபர்களாக அறநிலையத் துறை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். 97 சதவீத கோயில்களில் இன்னும் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை’’ என்று குற்றம் சாட்டப்பட்டது.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்டக் குழுக்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதவிக் காலம் முடிந்த 6 மாவட்டங்களில் இந்த குழுக்கள் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளாக…
அதிக வருமானம் வரக்கூடிய 314 கோயில்களுக்கு மட்டுமே உடனடியாக அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக முறையாக நிரப்பப்படாத அறங்காவலர் பதவிகளை நிரப்ப தற்போதைய அரசு முன்வந்துள்ளது. அந்த பணிகளை முழுமையாக முடிக்க மனுதாரரும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் எத்தனைகோயில்கள் உள்ளன, அவற்றில்எத்தனை கோயில்கள் பரம்பரைஅறங்காவலர்களின் கட்டுப்பாட்டில் வரும், அறங்காவலர், பரம்பரை அறங்காவலர் காலியிடங்கள் எத்தனை உள்ளன, அத்தகைய அறங்காவலர்களை நியமிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளிவைத்தனர்.