உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தற்போதைய அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் நீதி வழங்கும் என எதிர்பார்க்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து ஆணைக்குழு அறிக்கைகளையும் மீளாய்வு செய்ததன் பின்னர் தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தின் மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இலங்கையில் அடுத்து ஆட்சி அமைக்கும் அரசாங்கமாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் என்பதே ஒரே நம்பிக்கையாகும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் அதை நகைச்சுவையாக மாற்றியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் கர்தினால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சுமார் 3 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்து வைத்து, நீதியை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் கொழும்பு பேராயர் மேலும் தெரிவித்தார்.