Courtesy: மு.தமிழ்செல்வன்
கடந்த 24.01.2022 அன்று மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் பின்வருமாறு தெரிவித்திருந்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்திருந்தன.
மாவட்டத்தின் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் மாவட்டத்தின் மிகப்பெரும் வளமான இரணைமடுகுளத்திற்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமுண்டு, மாவட்டத்திலிருக்கின்ற மிகப்பெரும் வளத்தை
நாம் இழக்க முடியாது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கடந்தவாரம் அதே மாவட்டச் செயலகத்தைச் சேர்ந்த மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ. கேதீஸ்வரன் சட்டவிரோத மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கு ஏற்படும் ஆபத்தை கவிதை வடிவில் தனது முகநூலில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்த பதிவில் அவரும் எச்சரித்திருந்தார். அதாவது “ 20 ஆயிரம் பேர் இரு போகம் செய்கின்ற குளத்தை கொடுத்திட்டால் வாயிலதான் மண், கள்ளனும் உங்கள் கமக்கட்டுக்குள்தான் இருக்கிறான். குளத்திற்கு கீழ் 24 அமைப்பிருந்தும் ஒற்றுமைப்படவில்லை என்றால் இருக்கிற குளத்தையும் காப்பாற்றமாட்டியல், 20 வருடமாக கஸ்டப்பட்டு 34 அடியாக உயரத்திய குளத்தை மடத்தனமாக மணலை அள்ளி அழிச்சி போடாதீங்கோ” என தெரிவித்திருந்தார்.
இவர்களை தவிர ஊடகவியலாளர்கள், சூழலியலாளர்கள், பொது அமைப்புக்கள் என பலரும் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்டத்தை சட்டவிரோத மணல் அகழ்விலிருந்து பாதுகாக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
கிளிநொச்சிக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்ற வகையில் கட்டுபாடின்றி இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க முடியாத அல்லது தடுத்து நிறுத்துவதற்கு அக்கறையோடு நடவடிக்கை எடுக்காத நிலைமையே காணப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இரணைமடுவுக்கு ஆபத்து
மாவட்டத்தில் பெரிய நீர்ப்பாசன குளங்கள் எட்டு உள்ளன. இவற்றில் இரணைமடு, அக்கராயன் வன்னேரி, கல்மடு, குளங்களை அண்டிய பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
ஏனைய குளங்களை அண்டிய பகுதிகளிலும் பெரியளவில் இல்லையெனிலும் மணல் அகழ்வு இடம்பெறுகிறது.
ஆனால் மாவட்டத்தின் மிகப்பெரும் சொத்தான இரணைமடு குளத்திற்கு கீழ் பகுதிகளில் கட்டுப்பாடின்றி இடம்பெறுகின்ற மணல் அகழ்வு அணைக்கட்டுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கியுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட பலரும் எச்சரித்து வருகின்றனர்.
இந்த குளங்கள் அனைத்தும் மண் அணைக்கட்டைக் கொண்டுள்ள குளங்கள் எனவே இவற்றின் அணைக்கட்டுக்களின் மறுபக்கம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
ஆனால் இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்கு கீழ் பக்கமாக ஒன்றரை கிலோ மீற்றரிலிருந்தே மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
அதாவது கோரமோட்டையிலிருந்து பண்ணங்கண்டி வரை சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகிறது. குளத்திற்கு மிக அருகில் 50 அடி மேல் ஆழம் வரைக்கும் மணல் அகழ்வு இடம்பெறுகிறது.
இது குளத்திற்கு மிகப்பெரும் ஆபத்து என நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
குளத்திலிருந்து இயல்பாக சிறியளவில் நீர் கசிவது பிரச்சினையில்லை. அது வழமை, ஆனால் இவ்வாறு ஆழமாக குளத்திற்கு அருகில் மணல் ஆகழ்வதன் காரணமாக நீர் கசிவு அதிகரிக்கும் இவ்வாறு அதிகரிக்கும் நீர் கசிவு ஒரு கட்டத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிக்கும் அது குளத்திற்கு மிகப்பெரும் ஆபத்தினை ஏற்படுத்தும் என எச்சரிக்கையுடன் கவலையினை நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்து வருகிறது. வெள்ளம் வருமுன் அணைக்கட்டுங்கள் என நீர்ப்பாசனத் திணைக்களம் கூறுகிறது.
கடல் கரையோர கிராமங்களில் மணல் அகழ்வு
கௌதாரிமுனை, கிளாலி மற்றும் பளையில் மேலும் பல கிராமங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வு கடல் நீரை ஊருக்குள் கொண்டு வந்து ஊரையே உவராக்கும் நிலைமையை ஏற்படுத்துகிறது.
கிளிநொச்சியின் சில கிராமங்களை இன்று காணவில்லை காரணம் உவர் காரணமாக மக்கள் முழுதாக வெளியேறிவிட்டனர். உதாரணமாக குஞ்சுக்குளம். எனவே இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் பல கிராமங்களுக்கு ஏற்படலாம்.
சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கிளாலி, அல்லிப்பளை, தர்மக்கேணி, மாசார், சோரன்பற்று, புலோப்பளை, இயக்கச்சி, முகமாலை போன்ற பிரதேசங்களிலும்,
பூநகரியில் கௌதாரிமுனை, முட்கொம்பன் பகுதிகளிலும், கரைச்சியில் இரணைமடு அக்கராயன்குளம், மருதநகர், வட்டக்கச்சி, கோரமோட்டை பன்னங்கண்டியிலும்,
கண்டாவளையில் கல்மடு, கண்டாவளை, பெரியகுளம், கல்லாறு, உழவனூர், தர்மபுரம் நெத்தலியாறு போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோர்
மாவட்டத்தில் விரல் விட்ட எண்ணக் கூடிய சிலரே சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர். இவர்கள் யார் என்பது பரம இரகசியமல்ல. அது ஊருக்கே தெரியும்.
ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்களுக்கு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்களிடம் எத்தனை உழவு இயந்திரங்கள் உண்டு, எத்தனை ரிப்பர்கள் உண்டு, எத்தனை பேர் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றார்கள் என அனைத்து தகவல்களும் தெரியும் தெரிந்தும் என்ன பயன்?
மேலும் அதிகாரத்தில் அரசியல் தரப்புக்களின் செல்வாக்குள்ளவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர்.
இதற்கு ஒரு படி மேல் ஒரு சிலர் அரசியல் கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்களாகவும் உள்ளனர். இறுதியாக நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போது பளை பிரதேசத்தில் அரசியல் கட்சி ஒன்றின் வட்டார வேட்பாளராக மணலை பெயரின் அடை மொழியாக கொண்ட ஒருவரை ஒரு கட்சி வேட்பாளராக நிறுத்தியிருந்தது. அதிஸ்டவசமாக அவர் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அரசியல் அதிகாரம், நிர்வாக அதிகாரம், பாதுகாப்புத் தரப்பு என அனைத்து தரப்பினர்களது அதிக செல்வாக்கு மிக்கவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.
இதன் காரணமாகவே அவர்களை எவராலும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது என பொது மக்கள் மிகப் பலமாக தெரிவிக்கின்றனர்.
ஒழுங்கமைப்பட்ட சட்டவிரோத குழுக்கள்
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களாக காணப்படுகின்றனர்.
இவர்களுக்கு பின்னால் பொலிஸ் அரசியல், மற்றும் அதிகார தரப்பின் பலம், பணபலம் காணப்படுகிறது. மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். அனைத்து தரப்பினர்களுடன் நல்ல தொடர்பாடல் உண்டு.
உரிய இடங்களுக்கு பொலிஸார் அல்லது ஏனைய அதிகாரிகள் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்து புறப்படும் முன்னர் சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல்கள் பறந்துவிடுகின்றன. அந்தளவுக்கு தொடர்பாடல்களுடன் காணப்படுகின்றனர்.
பிரதான சந்திகளில் நாள் ஒன்றுக்கு 1500 ரூபா கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இவர்களால் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீதிகளில் கைத்தொலைபேசியுடன் காத்திருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமானவர்கள் அல்லது பொலிஸ், அதிகாரிகள் அந்த இடங்களுக்கு வருகின்ற போது தகவல்களை மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களுக்கு அனுப்ப அவர்கள் அந்த இடங்களிலிருந்து தப்பிவிடுகின்றனர். இவ்வாறு மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்படுகின்றவர்களாக காணப்படுகின்றனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் வேலைக்கு அமர்த்தப்படுகின்ற பெரும்பாலான இளைஞர்கள் போதை மற்றும் சட்டவிரோத மதுவுக்கு அடிமையானவர்களாகவும் மாறியுள்ளனர்.
பொறுப்புள்ளவர்கள்
கனியவளத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் அமைப்புக்கள் என அனைவருக்கும் பொறுப்புண்டு.
இங்கே சமூகத்தின் பொறுப்பு அதிகம் காணப்படுகிறது. ஆனால் சமூகம் இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக தனது கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. நமக்கேன் வம்பு என்று கணக்கில் சமூகம் காணப்படுகிறது. இது சட்டவிரோதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
குறுகிய காலத்திற்குள் அதிகளவு இலாபத்தை உழைக்கும் நோக்குடன் எவ்வித சமூக அக்கறையும், சுற்றுச் சூழல் நலன்களையும் கருத்தில் எடுக்காது சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகிறது.
இச் செயற்பாடுகளுக்கு தங்களது தலையில் தாங்களே மண் அள்ளிப் போடுவது போன்று உள்ளுர் வாசிகள் சிலர் பயன்படுத்தப்படுகின்றனர்.
வேலையின்மை அதனால் ஏற்பட்ட வறுமை, குறுகிய நேரத்திற்குள் அதிக வருமானத்தை உழைத்தல் போன்ற பல காரணங்களுக்காக கிராமவாசிகளில் சிலர் இச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
அவ்வப்போது இடம்பெறும் கூட்டங்களும், தீர்மானங்களும்
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் சமூகத்திலிருந்து எதிர்ப்பு குரல்கள் எழுகின்றபோது அல்லது ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவருகின்ற போது அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள், பாதுகாப்பு தரப்பினர்கள் கூடுவார்கள், சில மணித்தியாலங்கள் பேசுவார்கள், தீர்மானங்கள் மேற்கொள்வார்கள், பொலிஸ் இராணுவம் சில நாட்கள் அல்லது வாரங்கள் கொஞ்சம் இறுக்கமான நடவடிக்கையில் இருப்பார்கள் அவ்வளவுதான்.
அதற்கு பின்னர் நிலைமை பழையப்படி வழமைக்கு திரும்பி விடும் என பொது மக்கள் கூறுகின்றனர்.
இதற்காக குளிரூட்டப்பட்ட அறைகளில் கூட்டம் போடுவார்கள் பேசுவார்கள் வெளியே வந்து ஊடகங்களுக்கு முன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை விடுவார்கள்.
அறிக்கையினை ஊடகங்களில் பார்க்கும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் வடிவேல் பாணியில் நக்கல் சிரிப்பு சிரித்துகொண்டே மணல் அகழ்வை மேற்கொள்ள கிளம்பிவிடுவார்கள் .
இதுதான் கடந்த சில வருடங்களாக கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் இடம்பெற்று வருகின்ற நடவடிக்கைகள்.
சமூகத்தின் பொறுப்பு
தங்கள் கண் முன்னே இந்த மாவட்டத்திற்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கும் சட்டவிரோத மணல் அகழ்வை கண்டும் காணாது கடந்து போகும் கிளிநொச்சி சமூகம் தங்கள் எதிர்கால சந்ததிக்கு செய்யும் மிகப்பெரும் அநீதியாகும்.
மக்கள் தங்களது சமூக பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. ஒரு சிலரின் நடவடிக்கை ஒரு பெரும் சமூகத்தையே பாதிக்கின்ற போது நமக்கேன் வம்பு என மௌனிகளாக பார்த்துகொண்டிருக்க முடியாது.
பொது மக்கள் இவற்றை தட்டிக் கேட்க தவறுகின்ற போது இயற்கையின் தண்டனை என்பது அனைவருக்குமானது என்பதனை மறந்துவிடாதீர்கள்.
கிளிநொச்சி தனக்குத் தானே குழி வெட்டுகிறது
இந்த சட்டவிரோத மணல் அகழ்வு என்பது மாவட்டத்திற்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்த போகிறது. என்பதனை சம்மந்தப்பட்ட அனைவரும் ஒன்றுக்கு பல தடவைகள் கூறிவிட்டனர்.
ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்துச் சென்றால் அது கிளிநொச்சி மாவட்டம் தனக்குத் தானே குழி வெட்டிக்கொள்வதற்கு ஒப்பானது. ஆகவே வெள்ளம் வரும் முன் அணையை கட்டுங்கள். இப்போதே விழித்துக்கொள்ளுங்கள் தவறின் பிழைத்துக்கொள்வது கடினமாகிவிடும்.