சென்னையில் வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன?

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வாக்குப்பதிவை 100 சதவீதமாக கொண்டுவர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின்போதும் முயற்சி எடுக்கிறது. ஆனால் எதிர் பார்த்த அளவுக்கு இன்னும் பலன் கிடைக்க வில்லை.

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில், உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் சென்னையில் தான் மிகக் குறைந்த அளவாக பதிவாகியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளும், மூன்று மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் 50 சதவீதத்தை தாண்டியே வாக்குப்பதிவாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 52.67 சதவீத வாக்குகளும், அதே ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயருக்கான வாக்குப் பதிவில் 52.67 சதவீத வாக்குகளும் பதிவாகின.

 

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது. மேலும், 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 61.85 சதவீத வாக்குகள் பதிவாகியது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 60.47 சதவீதமும், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 59.01 சதவீத வாக்குகளும் பதிவாகியது.

நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகக்குறைந்த அளவாக 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது.

50 சதவீதத்துக்கும் கீழ் ஓட்டுப்பதிவு சரிந்தது ஏன்? என்று ஒவ்வொரு தளத்திலும் விவாதிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு, வேட்பாளர்களின் சொல்வாக்கு எதுவும் கை கொடுக்காமல் போனது ஏன்?

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலைவிட பரபரப்பாக பேசப்பட்ட தேர்தல், பணமும், பரிசு பொருட்களும் தாராளமாகவே விளையாடியது. ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை பணமும் பல இடங்களில் விநியோகம் நடந்தது. இவ்வளவு நடந்தும் வாக்குப்பதிவு குறைந்தது தான் ஆச்சரியமாக பார்க்கப் படுகிறது.

இதற்கு அரசியல்வாதிகள் கூறும் காரணம்:-

சென்னையை பொறுத்தவரை 55 சதவீத வாக்குகள்தான் பதிவாகும். இந்த தேர்தலில் 10 சதவீதம் குறைந்து இருக்கிறது. அதற்கு காரணம் இடம் பெயர்ந்ததுதான்.

கொரோனா முதல் அலை ஊரடங்கின்போது சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பி வந்தார்கள். 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதும், அதிகமானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பி வரவில்லை. வீடுகளில் இருந்தே வேலை பார்க்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்தினர் வாழ்வாதாரம் பாதித்ததால் நகரத்தில் வாழ்வது சிரமம் என்று ஊர்களுக்கு சென்று விட்டார்கள்.

மேலும் வழக்கம்போலவே சாதாரண பாமர மக்கள் அதிகமாக வாக்களித்துள்ளார்கள். மேல்தட்டு மக்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை. நடுநிலையான மக்கள் கருத்து வேறுவிதமாக உள்ளது.

அரசியலில் நடக்கும் ஊழல், முறைகேடுகள் போன்றவற்றால் யாருக்கு ஓட்டு போட்டு என்ன வாகப்போகிறது என்ற விரக்திதான் வாக்குப்பதிவு குறைவுக்கு காரணம் என்கிறார்கள்.

அரசியலில் தீவிரமாக இருப்பவர்களும், வேட்பாளர்களும், வேட்பாளர்கள் தேர்வில் பிரச்சினை, உட்கட்சிகளுக்குள்ளேயே ஏற்பட்ட போட்டிகளால் தேர்தல் பணியில் ஆர்வமாக ஈடுபடவில்லை என்கிறார்கள்.

நோட்டா வசதி இருந்திருந்தால் பலர் வாக்களித்து இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.

எது எப்படியோ 50 சதவீதத்துக்கும் குறைவான மக்களே வாக்குப்பதிவு செய்து தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து கவலைக்குரியது.

இதையும் படியுங்கள்… நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.