திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் தரிசனம் மட்டுமன்றி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக் கூட்டத்தில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அதன்படி, வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ. 50,000 -இல் இருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ரூ.1000-இல் இருந்து ரூ.2,500-ஆகவும், சுப்ரபாதம் தரிசன கட்டணம் ரூ.240-இல் இருந்து ரூ. 2ஆயிரமாகவும் அதிகரிக்கப்படுகிறது. தோமாலா சேவை மற்றும் அர்ச்சனைக் கட்டணத்தை ரூ.440 -இல் இருந்து ரூ. 5 ஆயிரமாக அதிகரிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் அடுத்த ஓரிரு நாள்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM