MNM protest in front SEC to stop vote counting: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மக்கள் நீதி மய்யம், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு அளித்துள்ளது.
தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நிகழ்ந்துள்ளது என்பதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மாநில தேர்தல் ஆணையம் முன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மறு வாக்குப்பதிவு நடத்திட வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணிக்கு மேல் கள்ள ஒட்டு பதிவானதாகவும், கொரோனா பாதித்தவர்கள் என்ற பெயரில் கள்ள வாக்கு செலுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை, சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து கருப்பு துணிகளால் கண்களை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்: பட்டியலின பெண் விவகாரம்: தீட்சிதர்களை கைது செய்ய கோரி டி.ஜி.பி.,க்கு சிபிஎம் கடிதம்
பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மாநில தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், கள்ள ஓட்டு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்தான உரிய விளக்கத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.
சென்னையில் வார்டு எண் 173ல் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை வாக்குச் சாவடிக்குள் வர அனுமதிக்காமல் அப்பட்டமான விதிமீறல் செய்து கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்குப்பதிவு செய்தவர்களின் விவரங்களை (கையெழுத்து, ரெஜிஸ்டர், சிசிடிவி காட்சிகள்) வேட்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்குப்பதிவு செய்த கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விவரங்களை பூத் வாரியாக வெளியிட வேண்டும்.
தமிழகம் எங்கும் நடைபெற்ற ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருள் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத பட்சத்தில் நடைபெற்ற தேர்தலை ரத்துச் செய்து மறுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.