பண்ணாரி சோதனைச்சாவடியில் போலி ரசீது கொடுத்து கட்டண வசூல்?! – வனத்துறை மீது எழுந்த குற்றச்சாட்டு!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக திண்டுக்கல்-மைசூர் இடையேயான நெடுஞ்சாலை செல்கிறது. தமிழக-கர்நாடக இடையே சரக்கு போக்குவரத்திற்குப் பிரதான சாலை என்றே இதை சொல்லாம். ஒரே வனப்பரப்பில் புலி, யானை, கழுதைப் புலி, வெளிமான் ஆகிய விலங்குகள் வாழும் உலகின் அரிய கானுயிர் வாழ்விடமாகத் திகழ்கிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். திம்பம் மலைப்பாதை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணிநேரமும் சென்றுகொண்டிருக்கின்றன.

பண்ணாரி சோதனைச் சாவடி அருகே வலம் வரும் யானைகள்

குறிப்பாக, இரவு நேரங்களில், இந்த மலைப்பகுதி வழியாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களான வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். இந்தப் பகுதியில்,வனவிலங்குகள் சாலையைக் கடக்கும் போது, அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்யவும், அதை பிப்ரவரி 10-ம் தேதி முதலே அமல்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்னர், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு போக்குவரத்துக்கான தடை அமலுக்குவந்தது. அந்த நாள் முதலே புதிதாக பண்ணாரி சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் அமலுக்கு வந்தது.

வனத்துறை நுழைவுக்கட்டணங்களின் விவரப்படி கார்களுக்கு 20 ரூபாயும், வேன்களுக்கு 30 ரூபாயும், 6 சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும், 8 சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும், 10 சக்கர வாகனங்களுக்கு 80 ரூபாயும், 12 சக்கர வாகனங்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், பண்ணாரி சோதனைச்சாவடியில் வசூல் செய்யப்படும் கட்டணங்கள் முறைப்படி இல்லை என வாகனஓட்டிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சத்தியமங்கலம்

இது தொடர்பாக சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக செல்லும் வாகனஓட்டிகளிடம் பேசிய போது, “பண்ணாரி சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் வசூலிப்பதால் அதிகம் நேரமாகிறது. கூடவே, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதனால், அந்த வழியாக வியாபார காரணங்களுக்காகச் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

வாகன நுழைவு கட்டணம்

திம்பம் சோதனைச்சாவடியில் 50 ரூபாய் செலுத்தினால் வழங்கப்படும் டிக்கெட் 24 மணிநேரமும் செல்லுபடியாகும். ஆனால், பண்ணாரி சோதனைச்சாவடியில் ஒவ்வொரு முறைக்கும் நுழைவுக்கட்டணம் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதனால், ஒவ்வொரு முறை அந்தப் பகுதிச் செல்லும் போதும் நுழைவுக்கட்டணம் செலுத்தவேண்டியதாக இருக்கிறது. இந்த மலைப்பகுதியின் நடுவில் வாகனங்கள் பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கு பலமணி நேரங்கள் ஆகின்றன” என்று வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.L சுந்தரத்திடம் பேசியபோது, “வனத்துறைதான் நுழைவுக்கட்டணத்தை தற்போது வசூலித்து வருகிறார்கள். அவர்கள் போலியான ரசீது நோட்டுகள் அச்சடித்து வைத்திருக்கிறார்கள். கையெழுத்து இல்லாமல் ரசீதுகள் வழங்குகிறார்கள். அவர்கள் வழங்கும் ரசீதுகள் போலியானவை. மக்களையும், அரசையும் வனத்துறையினர் ஏமாற்ற முயற்சி செய்கின்றனர்” என குற்றம்சாட்டினார்.

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.L சுந்தரம்

மேலும், இது சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி நிகர் ராஜன் IFS (Chief Conservator of Forests – Erode) னிடம் பேசினோம். “அதிக வாகனங்கள் வந்ததால், அந்த சமயத்தில் சிறிது தவறுகள் ஏற்பட்டிருக்கிறது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது அனைத்துமே சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. கையெழுத்தில்லாமல் ரசீது வழங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை;

வனத்துறை அதிகாரி நிகர் ராஜன்

இருப்பினும் தற்போது தானியங்கு இயந்திரங்களை ஆர்டர் செய்துள்ளோம். ஓரிரு நாள்களில் வந்தடையும் என எதிர்பார்க்கிறோம். இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாதுதான். இருந்தும் நடந்துள்ளது. இதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் கண்டித்துள்ளேன். வரும்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது” என உறுதிபட கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.