பனீர் 65 | பிரெட் வடை | சீஸ் ரைஸ் பால்ஸ் | இட்லி பக்கோடா – ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வார விடுமுறை என்றாலே காலையும் மதியமும் என்ன சமைப்பது என்பதற்கு இணையாக, மாலை நேர ஸ்நாக்ஸுக்கு என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும் பலருக்கும். வழக்கமான ஸ்நாக்ஸ் வகைகள்தான்… கொஞ்சம் வித்தியாசமாகச் செய்தால் சுவையும் ஆரோக்கியமும் பன்மடங்கு கூடும். அப்படி சில வீக் எண்டு வெரைட்டீஸ் இதோ உங்களுக்காக…

தேவையானவை:

இட்லி மாவு அல்லது தோசை மாவு – 3 கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் – 2 (துருவவும்)
பீன்ஸ் – 10 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

மசாலா பணியாரம்

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு கேரட் துருவல், பீன்ஸ், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வேகவிடவும். இறுதியாக தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி, கிளறி இறக்கவும். ஆறியதும் இதை இட்லி/தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு மாவைக் குழிகளில் நிரப்பி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மிளகாய்த்தூளுக்குப் பதிலாகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கலாம்.

தேவையானவை:

பனீர் – 200 கிராம் (சதுர துண்டுகளாக்கவும்)
மைதா மாவு – கால் கப்
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) – 1/8 கப்
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – தலா 1/8 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

பனீர் 65

செய்முறை:

மைதா மாவுடன் கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, தயிர், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக, கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இந்தக் கலவை பனீர் துண்டுகளில் தடவும் அளவுக்குக் கெட்டியாக இருக்க வேண்டும்.

மிகவும் கெட்டியாகவோ, மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது. அதனுடன் பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு பனீர் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: ஊறவைத்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, தேவையானபோது பொரிக்கலாம். தயிருக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

தேவையானவை:

சாதம் – அரை கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
குடமிளகாய் – பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
கேரட் – ஒன்று (துருவவும்)
சீஸ் துருவல் – கால் கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – 1/8 டீஸ்பூன்
மைதா மாவு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

சீஸ் ரைஸ் பால்ஸ்

செய்முறை:

சாதத்தை `ஃபோர்க் ஸ்பூனால்’ நன்கு மசிக்கவும். அதனுடன் வெங்காயம், குடமிளகாய், கேரட் துருவல், சீஸ் துருவல், மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு கலவையை உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: மீதமான சாதத்தையும் பயன்படுத்தலாம். சீஸ் துருவலுக்குப் பதிலாக சீஸ் ஃக்யூப்களை நடுவே வைத்தும் செய்யலாம். பொரிக்கும்போது ரைஸ் பால்ஸ் பிளந்தால், மாவுடன் மேலும் சிறிதளவு மைதா அல்லது சோள மாவு சேர்த்துச் செய்யலாம். எல்லாப் பொருள்களையும் கலந்தவுடன் உடனடியாகப் பொரித்தெடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் கலவை நீர்த்துவிடும்.

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ்கள் – 4 (சிறிய துண்டுகளாக்கவும்)
அரிசி மாவு – கால் கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் – ஒன்று (துருவவும்)
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

பிரெட் வடை

செய்முறை:

பிரெட் துண்டுகளுடன் தயிர், அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் துருவல், இஞ்சி, கொத்தமல்லித்தழை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வடை போல தட்டி நடுவே துளையிட்டு எண்ணெயில் போட்டு, அடுப்பை மிகவும் மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: பொடியாக நறுக்கிய கீரையைச் சேர்த்துச் செய்தால், ஆரோக்கியமான உணவாக அமையும்.

தேவையானவை:

மீதமான இட்லி – 4
கடலை மாவு – அரை கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

இட்லி பக்கோடா

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் இட்லிகளைச் சேர்த்துக் கைகளால் உதிர்க்கவும். அதனுடன் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இட்லி கலவையைச் சிறிய உருண்டைகளாக்கிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: கலவையைப் பிசையத் தண்ணீர் தேவையில்லை. வேண்டுமானால் சூடான எண்ணெய் சிறிதளவு சேர்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.