சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் “ஒசாமா ஜி” என அழைப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர்
யோகி ஆதித்யநாத்
தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோயில் நடைபெற்ற பேரணியில், சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு முந்தைய உத்தர பிரதேச அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
பொது மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது:
சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் அணுகுமுறை கவலையளிக்கிறது. ஒசாமா போன்ற பயங்கரவாதியை இவர்கள் ‘ஜி’ என்று அழைக்கின்றனர். 2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயம் அடைந்தனர்.
சில கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுகின்றன. மேலும் உத்தர பிரதேசத்தில் நடந்த 14 பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில், பல பயங்கரவாதிகளின் மீதான வழக்குகளை திரும்ப பெற சமாஜ்வாதி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமாஜ்னாடி தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் கட்சி பாகிஸ்தான் மற்றும் அதன் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் ஆதரவாளர்கள். அரசியல் உள்நோக்கத்தோடு எங்கள் பண்டிகைகளை நிறுத்தியவர்களுக்கு மார்ச் 10 ஆம் தேதி உத்தர பிரதேச மக்களிடம் இருந்து பதில் கிடைக்கும். அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பின் போது பயங்கரவாதிகள் குண்டுகளை சைக்களில் எடுத்து வந்து மறைத்து வைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம் சைக்களின் என்பது குறிப்பிடத்தக்கது.