புதுடில்லி: கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடும் வகையில், தலைநகர் டில்லியில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பழைய வாகனங்களுக்கு பதில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டில்லி அரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பயணம் செய்வதற்காக 12 மின்சார வாகனங்களை மாநில பொதுநிர்வாகத்துறை வாங்கி உள்ளது.
இது தொடர்பாக அந்த துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், தங்களது ஆயுட்காலத்தை முடிந்த வாகனங்களை கண்டறிந்து, பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டு கிடக்கும் விஐபி பதிவு எண்கள் கொண்ட கார்களையும் மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதற்காக, அந்த பதிவெண்களை தக்க வைத்து, புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு சூட்டப்படும் என தெரிவித்தார்.
டில்லியில், டீசலில் இயங்கும் வாகனங்களை 10 ஆண்டுகளுக்கு மேலும், பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை 15 ஆண்டுகளுக்கு மேலும் பயன்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு ஏற்றவாறு கடந்த 2020 ஆகஸ்ட்டில் மின்சார வாகன கொள்கை வெளியிடப்பட்டது. இதன்படி, டில்லி அரசின் கீழ் வரும் பல துறைகள் மற்றும் தன்னாட்சி பெற்ற அமைப்புகள், தங்களிடம் உள்ள டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தன. கடந்த ஆண்டு பிப்., மாதம், மின்சார வாகனங்களை மட்டும் தான் வாங்க வேண்டும் என அனைத்து துறைகளுக்கம் டில்லி அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி 2 ஆயிரம் வாகனங்களை மாற்றப்பட உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement