தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோர், மத்திய பாஜக அரசை கூட்டாக விமர்சித்தனர்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக, பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களையும், பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இருவருமே ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவை, தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, சந்திரசேகர் ராவ் கூறியதாவது:
நாங்கள் இருவரும் சகோதரரைப் போன்றவர்கள். இரு மாநிலங்களும் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. மகாராஷ்டிர மாநில அரசின் ஒத்துழைப்புடன் நாங்கள் காலெஷ்வரம் திட்டத்தை செயல்படுத்தினோம். மகாராஷ்டிர அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம்.
எங்களின் சந்திப்பிற்கான நல்ல பலன் கிடைக்க உள்ளதை நீங்கள் பார்ப்பீர்கள். உத்தவ் தாக்கரேவை, தெலங்கானாவிற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளேன். மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசு, தங்களது கொள்கைகளை மாற்றி கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே கூறியதாவது:
எங்களின் இந்துத்வா தவறான அரசியலை போதிக்கவில்லை. நாடு நரகத்திற்கு சென்றாலும் சிலர் தங்களின் சுயநலத்திற்காக மட்டுமே பணியாற்றுகின்றனர். நாட்டை சரியான பாதைக்கு நாங்கள் கொண்டு செல்வோம். பிரதமர் யார் என்பதை பின்னர் விவாதிக்கலாம்.
இந்துத்துவா
என்பது வன்முறையோ பழிவாங்கலோ அல்ல. மத்திய பாஜக அரசு தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இப்படியே தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்?
இவ்வாறு அவர் பேசினார்.