ஜெனீவா: “கரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படுவதும், மருத்துவமனைகளில் மக்கள் அனுமதிக்கப்படுவதும், ஊரடங்குகள் அமல் படுத்தப்படுவதும் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிடும்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
‘தடுப்பூசிகள் செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு’ என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் இந்தக் கருத்தரங்களில் பங்கேற்றனர். கருத்தரங்குக்கு தலைமை வகித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் மைக்கெல் ரியான் பேசியதாவது:
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. பணக்கார நாடுகளில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அதிகமாகவும், ஏழை நாடுகளில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை மிகக்குறைவாகவும் இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும். கரோனா வைரஸை பொறுத்தவரை, உலகின் எந்த மூலையில் அது இருந்தாலும் சிறிது நாட்களிலேயே அனைத்து நாடுகளுக்கும் பல்கி பெருகிவிடும். எனவே, தடுப்பூசியை செலுத்துவதில் உள்ள ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இல்லை யென்றால், கரோனா வைரஸால் உயிரிழப்புகள் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது.
கரோனா வைரஸை இனி முழுமையாக ஒழிப்பது என்பது இயலாத காரியம். அது, இறுதியாக நமது சுற்றுச்சூழலுடன் ஒன்றிவிடும். ஆனால், உலகம் முழுவதும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சமமான விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்படுமானால், பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், மருத்துவமனைகளில் கொத்து கொத்தாக மக்கள் அனுமதிக்கப்படுதல், வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்படுதல் என அனைத்தும் நடப்பாண்டுடன் முடிவுக்கு வந்து விடும்.
இவ்வாறு மைக்கெல் ரியான் கூறினார்.