புதுச்சேரி: புதுச்சேரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்துவதற்கு திமுகவிற்கு விருப்பமில்லை என புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாலர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடே அளிக்காமல் தேர்தலை நடத்திக் கொள்வது மாநில அரசின் விருப்பத்தை பொறுத்தது என்று உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்தது. உண்மை நிலை இவ்வாறு இருக்க புதுவை திமுக உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த மகராஷ்டிர மாநில அரசை காரணம் காட்டி மக்களை திசை திருப்புகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் திமுகவிற்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை, எதையாவது ஒரு காரணத்தை கையில் எடுத்துக் கொண்டு நீதி மன்றத்தின் மூலம் தேர்தலை தடுப்பதுதான் திமுகவின் உண்மை நிலையாகும். 2016ம் ஆண்டு நடைபெற்ற வார்டு மறுசீரமைப்பு அட்டவணையை ரத்து செய்து தேர்தலை அறிவித்தாலே பல்வேறு குழப்பங்கள் தீரும். எனவே, 2001ம் ஆண்டு மக்கள்தொகையில் அடிப்படையில் அப்போதைய நகராட்சிகள், நகராட்சிகளின் வார்டு, கொம்யூன் பஞ்சாயத்துக்கள், வார்டு எண்ணிக்கைகளில் மாற்றம் செய்யாமல் சுழற்சி முறையில் உரிய இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
இந்திய அளவில் புதுவையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்ற பிரதமருடைய ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் நமது மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிய அரசு முன்வர வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தியுள்ள திமுகவிற்கு, உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்”
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.