பெங்களூரு ஏ.டி.பி. சேலஞ்சர் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் காடே ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர எர்லர் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆண்களுக்கான இரண்டாவது ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதன் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடியும் இந்தியாவின் அர்ஜுன் காடே, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர் ஜோடியும் மோதின.
விறுவிறுப்பாக நடை பெற்ற ஆட்டத்தில் முதல் செட்டை அர்ஜுன் காடே, அலெக்சாண்டர் எர்லர் ஜோடி 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது. பின் எழுச்சி கண்ட சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, இரண்டாவது செட்டை 7-6 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது சுற்று ‘டை பிரேக்கர்’ வரை சென்றதால் ஆட்டத்தொல் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கர்’ சுற்று நடைபெற்றது. இந்த சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜுன் காடே, அலெக்சாண்டர் எர்லர் ஜோடி 10-7 என வென்றது.
ஒரு மணி நேரம், 25 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டியில் அர்ஜுன் காடே, அலெக்சாண்டர் எர்லர் ஜோடி 6-3, 6-7, 10-7 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.