சென்னை: நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணிக்குப் பின்னர் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால், மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி மக்கள் நீதி மய்யத்தினர் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மாலை 5 மணிக்கு மேல் தமிழகம் எங்கும் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள்கள் முற்றுகையிட்டனர். மேலும் கண்களில் கருப்புத்துணியைக் கட்டியபடி தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கள்ள ஓட்டுகள் செலுத்தப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், மறு வாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையரைச் சந்தித்து மனு: பின்னர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ,கள்ள ஓட்டு செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என மனு அளித்தனர். இந்த மனு அளிக்கும்போதும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கண்களை கருப்புத்துணியால் கட்டியிருந்தனர்.