2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் 140 வது அமர்வை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டின் மே – ஜூன் மாதங்களில் மும்பையில் இந்த அமர்வு நடைபெறும் என்றும் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் அத்தனை பேரும் இதில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய விளையாட்டு வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்ஸை நடத்த வேண்டும் என்கிற இந்திய தேசத்தின் கனவை நிறைவேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாக இது இருக்கும் கூறப்படுகிறது.
சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் அத்தனை உறுப்பினர்களும் ஆண்டிற்கு ஒரு முறை கூடி ஆலோசிப்பது வழக்கம். இந்த கூட்டங்களில்தான் அடுத்தடுத்த ஒலிம்பிக்ஸ்களை நடத்தும் நாடுகள், ஒலிம்பிக்ஸில் புதிதாகச் சேர்க்க வேண்டிய மற்றும் நீக்க வேண்டிய விளையாட்டுகள் உட்பட ஒலிம்பிக்ஸ் சார்ந்து பல முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படும். இந்த 2022க்கான சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் அமர்வு சீனாவின் பீஜிங்கில் பிப்ரவரி 3 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றிருந்தது. இந்த அமர்விலேயே 2023-ம் ஆண்டிற்கான அமர்வை நடத்தும் நகரமாக இந்தியாவின் மும்பை தேர்வு செய்யப்பட்டது.

இந்தியா சார்பில் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் நீதா அம்பானி, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவரான நரீந்தர் பத்ரா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், 2008 ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றிருந்த அபினவ் பிந்த்ரா ஆகியோர் ஆகியோர் மும்பை ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான வாதங்களை முன் வைத்திருந்தனர். இது சார்ந்து உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் 75 உறுப்பினர்கள் மும்பைக்கு ஆதரவாகவும் ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் எதிராகவும் வாக்களித்திருந்தார். இறுதியில் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் தலைவரான தாமஸ் பேச் மும்பையே 140 வது அமர்வை நடத்தும் என அறிவித்தார்.
என சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் தலைவரான தாமஸ் பேச் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் 1983-ம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் 86 வது அமர்வு டெல்லியில் நடத்தப்பட்டிருந்தது. 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. ஒலிம்பிக்ஸை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்பது பெரும்பாலான நாடுகளின் கனவாக இருக்கிறதும் இந்தியாவிற்கும் அப்படியே. 1982-ல் ஆசிய போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதிலிருந்தே இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் என்கிற பேச்சு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், இன்னும் அது சாத்தியப்படவில்லை. அந்த ஒலிம்பிக்ஸ் கனவை நிறைவேற்றுவதற்கான முதல் படியாக சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் இந்த அமர்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினராக நீதா அம்பானி சேர்க்கப்பட்டதிலிருந்தே, ஒலிம்பிக்ஸ் சார்ந்த முன்னெடுப்புகள் வேகமெடுக்க தொடங்கின. 2017-ம் ஆண்டிலிருந்தே இந்த அமர்வை மும்பையில் நடத்துவதற்கான வேலைகள் தொடங்கின. 2019-ம் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி சார்பில் ஒரு குழு மும்பைக்கு வந்து இங்குள்ள வசதி வாய்ப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றது. அமர்வுகளை நடத்துவதற்கு தகுதியான இடம் என அந்தக் குழு அறிக்கை அளித்தது. அதனைத் தொடர்ந்தே இப்போது வாக்கெடுப்பின் அடிப்படையில் 140வது அமர்வை நடத்த மும்பை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் தவிர உலகம் முழுவதிலிருந்தும் பத்திரிகையாளர்களும் இந்த அமர்வின் பொருட்டு மும்பையில் முகாமிடுவார்கள். இந்த அமர்வை சிறப்பாக நடத்தி முடிக்கும்பட்சத்தில் அது இந்தியாவின் மேல் நல்ல அபிப்ராயத்தை கொடுக்கும். அதன்மூலம், அடுத்தக்கட்டமாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பையுமே கூட பெற்றுக்கொடுக்கலாம்.
முன்னதாக இந்தியா 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்தது. ஆனால், வழக்கம்போல அது கையைவிட்டு சென்றது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்த இருக்கிறது. இப்போது 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸை நடத்தும் முனைப்பில் இருக்கிறது. அதிகபட்சமாக 2048க்குள் அதாவது இந்தியா சுதந்திரமடைந்து நூறாண்டுகளை நிறைவு செய்கிற சமயத்திற்குள் ஒலிம்பிக்ஸை நடத்த வேண்டும் என்கிற தீர்க்கத்தோடு இந்தியா இருக்கிறது.
என பிரதமர் மோடி ட்வீட் செய்திருக்கிறார்.
It is gladdening to note that India has been chosen to host the 2023 International Olympic Committee Session. I am confident this will be a memorable IOC session and will lead to positive outcomes for world sports: PM @narendramodi #StrongerTogether
— PMO India (@PMOIndia) February 19, 2022
“40 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் சார்ந்த ஒரு நிகழ்வு மும்பையில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய இளைஞர்கள் ஒலிம்பிக்ஸின் மேஜிக்கை உணர்வதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். வருங்காலத்தில் ஒலிம்பிக்ஸை நடத்த வேண்டும் என்பது இந்தியாவின் மிகப்பெரிய கனவு” என நீதா அம்பானி தெரிவித்திருக்கிறார்.
ஒலிம்பிக்ஸ் போட்டியை ஒரு நாடு நடத்தும்போது வழக்கமாக அந்த நாடுகள் மற்ற ஒலிம்பிக்ஸ் தொடர்களில் செய்யும் பெர்ஃபார்மென்ஸை விட சிறப்பான பெர்ஃபார்மென்ஸ்களை செய்து அதிக பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்தியா போன்ற இளைஞர்கள் அதிகமிருக்கும் நாடுகளில் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படும்போது அது விளையாட்டு சார்ந்த அபார வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும். அதேநேரத்தில், ஒலிம்பிக்ஸை நடத்தும் நாடுகள் பெருமளவில் செலவு செய்வதால் பொருளாதாரரீதியாக சரிவை சந்திப்பதாகவும், அதனால் பல நாடுகளிடம் ஒலிம்பிக்ஸ் நடத்தும் ஆர்வம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், ஒரே ஒரு முறையாவது ஒலிம்பிக்ஸை நடத்தி தங்கள் நாட்டின் வல்லமையை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டிவிட வேண்டும் என்கிற ஆர்வமும் சில நாடுகளுக்கு இருக்கிறது. இந்தியாவும் அதில் ஒன்று. இந்தியாவின் கனவு நிறைவேறுமா?