ரஜினிக்காக 30 ஆண்டுகளாக வாக்களிக்காத ரசிகர்- மனது மாறி உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்

புதுக்கோட்டை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து எதிர்பார்த்து வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற வாக்குறுதியை அவர் அளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்த் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பின் போது ரஜினிகாந்திற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என கூறினார்.  தேர்தல் ஒன்றில் வாக்களித்தால் அது ரஜினிக்காக மட்டுமே இருக்கும் என்று சபதமேற்று வாழ்ந்த ரசிகர் ஒருவர் தனது மனதை மாற்றி நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்துள்ளார். இதற்காக அவர் 30 ஆண்டுகள் காத்திருந்துள்ளார்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). சிறு வயதில் இருந்தே இவர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர். பள்ளியில் படிக்கும் காலம் முதலே ரஜினி மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டிருந்தார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தனது முதல் வாக்கை செலுத்துவது என விடாப்பிடியாக இருந்து வந்தார். தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டபோது கூட மகேந்திரன் வாக்கை செலுத்தவில்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2017 ஆம் ஆண்டில் அறிவித்தார். இதனால் மகேந்திரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நடிகர் ரஜினியின் கட்சிக்கு தனது முதல் வாக்கை செலுத்த அவர் காத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தது மகேந்திரனுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில் 30 ஆண்டுகள் கழித்து தனது முதல் வாக்கை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அளித்துள்ளார் மகேந்திரன். புதுக்கோட்டை நகராட்சி 22-வது வார்டில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்திருந்த நான், அவர் ஆட்சிக்கு வந்ததும் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் தனது எண்ணத்தைத் தெளிவாகக் கூறியதால், கடைசியாக எனது வாக்குரிமையைப் பயன்படுத்த நினைத்தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறப்பாகச் செயல்படுவதை உணர்ந்தேன்.

ரஜினி என்ன செய்வார் என நான் எதிர்பார்த்ததை, முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். எங்கள் எம்.பி., எம்.எம். அப்துல்லாவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.