மாஸ்கோ-ரஷ்ய ஆதரவுடன், உக்ரைனில் பிரிவினை வாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழந்ததால், பதற்றம் அதிகரித்து உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால், இருநாட்டு எல்லைப் பகுதியில், பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில், உக்ரைனில், உள்நாட்டு போருக்கு வழிவகுத்து, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
உக்ரைனில், அரசுக்கு எதிரான பிரிவினைவாதிகளை வைத்து, அங்கு வன்முறைகளை கட்டவிழ்க்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக, ரஷ்ய ஆதரவுடன், உக்ரைனில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு பகுதியில், பிரிவினைவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புதாக்குதலில், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இதை, உக்ரைன் ராணுவ அமைச்சகம் நேற்று உறுதிபடுத்தியது.இதற்கிடையே, உக்ரைன் பிரிவினைவாத தலைவர்கள், மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
வன்முறைகளை துாண்டும் விதமாக, ஆயுதங்களை கையில் எடுக்குமாறு, மக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர். நிலைமை கை மீறி போவதை தடுக்க, உக்ரைன்அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.ரஷ்யாவே காரணம்!ரஷ்யா – உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ரஷ்யா மீது, அமெரிக்கா நேற்று ஒரு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.
இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஆனி நியூபர்கர் கூறுகையில், ”சில நாட்களுக்கு முன், உக்ரைன் ராணுவ அமைச்சகம் மற்றும் அந்நாட்டின் பிரதான வங்கிகளை குறிவைத்து, ‘சைபர் அட்டாக்’ எனப்படும், இணைய வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு, ரஷ்யாவே காரணம்,” என்றார். ரஷ்யாவுக்கு கட்டுப்பாடுகள்உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யாவுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஆயத்தமாகி வருகிறது. குறிப்பாக, ரஷ்யாவின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்று வெளியிட்டார்.