கொல்கத்தா:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்திய வீரர்கள் அதே உற்சாகத்துடன் ஆடினர். துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் களமிறங்கினர். ருதுராஜ் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் குவித்தது.
ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களிலும், இஷான் கிஷன் 34 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்தனர். அணியின் ஸ்கோர் 93 ஆக இருந்தபோது, கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவித்தனர். சூர்யகுமார் யாதவ் பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் யாதவ் 3 சிக்சர்கள் விளாசினார். மொத்தம் 31 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்து, ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால், 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் அய்யர் 19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர், ரொமாரியா ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், வால்ஷ், டிரேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.