பாகிஸ்தானின் வணிக நகரமான லாகூரின் சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்திய எல்லையில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய நகரம் லாகூர். வணிக நகரமான இங்கு பல சந்தைகள் உள்ளன. இதனால் ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் இங்கு வருவதுண்டு. இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வால்ட் சிட்டிக்கு அருகில் உள்ள அனார்கலி சந்தையில்தான் சில மணி நேரங்களுக்கு முன் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியை ஒட்டி நடந்த இந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 22 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பால் நிலத்தில் 1.5 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல், அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன. சில மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவர் உயிரிழந்திருப்பதை லாகூர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராணா ஆரிப் உறுதி செய்துள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
லாகூர் துணை இன்ஸ்பெக்டர் முஹம்மது அபித் கான் பேசுகையில், “குண்டுவெடிப்பின் தன்மையை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். தற்போது விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு சோதனை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.