புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசம் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: தேசப்பற்று மற்றம் சமூக நல்லிணக்க உணர்வு மூலம் அருணாச்சல பிரதேசம் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லப்படும். மாநிலத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை மக்கள் பாதுகாக்கும் விதமும், அதனை முன்னெடுத்து செல்லும் விதமும் நாட்டிற்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்களை தேசம் நினைவு கொள்கிறது. ஆங்லோ அபோர் போராகட்டும், சுதந்திரத்திற்கு பிறகு எல்லைகளை பாதுகாக்க நடந்த போராகட்டும் அருணாச்சல பிரதேச மக்களின் வீரம் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும்.
21ம் நூற்றாண்டில், இந்தியாவின் வளர்ச்சிக்கு, கிழக்கு இந்தியா குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்காற்றும் என நம்புகிறேன். கிழக்கு ஆசியாவின் பெரிய நுழைவு வாயிலாக அருணாச்சலை உருவாக்க உழைத்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்பில், அருணாச்சல்லின் பங்கை கருத்தில் கொண்டு, அங்கு, நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
Advertisement