தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில், பேரூராட்சிகளைவிட மாநகராட்சிகள், நகராட்சிகள் மிகவும் குறைவான சதவீதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு நகர்ப்புற வாக்காளர்களின் அக்கறையின்மையே காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிப்ரவரி 19ம் தேதி கோவிட் நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில், சென்னையில் வெறும் 4%, தாம்பரத்தில் 3% மற்றும் ஆவடியில் 0.4% வாக்குகள் பதிவாகி இருந்தது. 21 மாநகராட்சிகளில் காலை 9 மணி நிலவரப்படி 5.8% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
அதற்கு பிறகு, பேரூராட்சிகளிலும் நகராட்சிகளிலும் வாக்குப்பதிவு வேகம் அதிகரித்தாலும் மாநகராட்சிகளில் 52.2% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, “சென்னையில் சமூக/பொருளாதார வசதி படைத்தவர்கள் சென்று இன்றைய உள்ளாட்சித் தேர்தலில் வாக்களியுங்கள். இங்கேதான் மாற்றம் தொடங்குகிறது. இதில் பங்கேற்காமல், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூடும்போது உங்கள் இடத்தைப் பற்றி புகார் செய்ய உங்களுக்கு எந்த வேலையும் இல்லை” என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழப்பு, அல்லது வன்முறை சம்பவங்கள் குறித்து பெரிய புகார்கள் எதுவும் இல்லை. ஆனால், நகரங்களில் பல வாக்குச் சாவடிகளில் பெண்கள் பெரிய அளவில் வந்து வாக்களிக்கவில்லை. மதுரை மற்றும் கோவையில் 53.99% மற்றும் 53.6% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடலூரில் மாலை 5 மணிக்கு மேல் ஏராளமானோர் வாக்களிக்க வந்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான மா.சுப்ரமணியன் கூறுகையில், கோவிட்-19 காரணமாக பல வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாகவும், அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருவதாகவும் கூறினார்.
“சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் 10 வீடுகளில் நான்கு வீடுகள் காலியாக இருப்பதைக் காண முடிந்தது. சென்னையில் குறைந்தது 15%-20% மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இதனால் வாக்குப்பதிவு குறைந்துள்ளது” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
குறைவான வருமானம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. உயர்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாகவே நடந்துள்ளது. மாநகராட்சிகளில் கரூர் 75.8% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு தான் காரணம் என கூறப்படுகிறது.
தேமுதிக தலைவர் பிரேமலதா பேசுகையில், “தேர்தல் அரசியலின் மீதான ஆழ்ந்த வேதனையும் வெறுப்பும் வாக்காளர்களை வாக்குச் சாவடிகளில் இருந்து விலக்கி வைக்கிறது. அதை எனது பிரச்சாரத்தில் பார்க்க முடிந்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், ஓட்டு போடுவதில் ஆர்வம் காட்டவில்லை.” என்று ஆளும் திமுகவை விமர்சனம் செய்தார்.
அதே நேரத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் உட்பட உள்ளாட்சி தலைவர்களைத் கவுன்சிலர்கள் மறைமுகமாகத் தேர்ந்தெடுப்பதால் அதன் மீது வாக்காளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“