சென்னை: தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறப் போகிறது என்பது 22ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும்.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டு களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் மூலம், தேர்தலில், 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர் கள் என மொத்தம் 12,838 வேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ன. அடங்கு வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கியது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, வாக்கு பதிவு தொடங்குவதில் சற்று தாமதமானது. உடனே மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். மாநகர், நகர்ப்புறங்களை விட பேருராட்சி பகுதிகளில் வாக்களிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். குறிப்பாக சென்னை மக்கள், வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத நிலை காணப்பட்டது. இது விவாதப்பொருளாக மாறி உள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. முன்னதாக மாலை 5மணி முதல் 6 மணி வரை, கொரோனா பாதிக்கப்பட்ட வர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், முன்னதாக வாக்குச்சாடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவையொட்டி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாலும், பற்றமான 5,960 வாக்குச்சாவடிகள் வெப்காம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டதாலும் எந்தவித பிரச்சினையுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்ற முடிவடைந்தது.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. பின்னர், தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் 218 பதவிகளுக்கு ஏற்கனவே, போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8வது வார்டில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதவிர காஞ்சிபுரம் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தொடர்புடைய வார்டுகளில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.