இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
வெஸ்ட் இண்டிஸ் அணி இந்தியாவில் 3 டி20 போட்டி கிரிக்கெட் தொடரில் விளையாடியாது. இதில் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (பிப்.20) நடைபெற்றது.
கோலிக்கு ஓய்வு: தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோ பபுள்) விளையாடி வருவதால் வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கடைசி 20 ஓவர் போட்டியில் இருந்து விராட்கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி சோபிக்காத விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மிடில் வரிசையில் களம் காண்பதுடன் விக்கெட் கீப்பிங் செய்தார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிக அதிக விலைக்கு (ரூ.15.25 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ ஓபன் டென்னிஸ், ஐ.எஸ்.எல் அப்டேட்.. மேலும் விளையாட்டுச் செய்திகள்
இந்த தொடரில் இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத வெஸ்ட்இண்டீஸ் ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது.
3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ருதுராஜ் கெய்வாட் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இஷான் கிஷன் 34 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் 25 ரன்னிலும் கேப்டன் ரோகித் சர்மா ) ரன்னிலும் ஆட்டமிழந்து இந்திய் அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இதையடுத்து, சூரியகுமார் யாதவும், வெங்கடேஷ் அய்யரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக சூரியகுமார் யாதவ் 7 சிக்சர்களைப் பறக்கவிட்டு 65 ரன்கள் குவித்தார். வெங்கடேஷ் 35 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில், டொமினிக் டிரேக்ஸ், ஹேடன் வால்ஷ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியொர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல் மேயர்ஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் களம் இறங்கினர். மேயர்ஸ் 6 ரன்னிலும் ஷாய் ஹோப் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். நிகோலஸ் பூரனுடன் ஜோடி சேர்ந்த ரோவன் பவல் அதிரடியாக விளையாடினாலும் பவல் 25 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பொல்லார்டு 5 ரன்னிலும், ஹோல்டர் 2 ரன்னிலும் ரோஸ்டன் சேஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆனால், மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நிகோலஸ் பூரன் அரை சதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரன் 61 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, நன்றாக விளையாடிய ரொமாரியோ ஷேப்பர்டு 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிரேக்ஸ் 4 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இறுதியில் பேபியன் ஆலன் 5 ரன், ஹெய்டன் வால்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷ் பட்டேல் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியதோடு வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.