அஜித்தின் ‘வலிமை’ வெளியாவதையொட்டி தயாரிப்பாளர் போனி கபூர், ’அஜித் தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர்” என்று கூறியுள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள ‘வலிமை’ வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. இதனையொட்டி, தயாரிப்பாளர் போனி கபூர் பேசும்போது,
“அஜித் மிகவும் அடக்கமான நடிகர். ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் தலைசிறந்தவர். தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அவர், என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. படத்தின் ஆரம்ப கட்ட பணிகளின்போது நாங்கள் எதிர்பார்த்தபடி இந்த திரைப்படத்தினை வடிவமைக்க அவர் பெரும் ஆதரவாக இருந்தார். ‘வலிமை’ படத்தில் இயக்குநர் வினோத்தின் உழைப்பு அளப்பரியது. அவர் ஒரு பெர்பக்ஸனிஸ்ட். தனது பார்வையை அடைய எந்தக் எல்லைக்கும் செல்வார், ஆனால், தயாரிப்பாளர் உடன் மிகுந்த நட்புடன் இருப்பார். இந்தக் கடினமான சவாலான தொற்றுநோய் கால கட்டத்தில் வலிமை படத்தினை முடிக்க, ஒரு குடும்பத்தைப் போல எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் இணைந்து உதவினர். அனைவருக்கும் நன்றி.
’வலிமை’ ஒரு தயாரிப்பாளராக, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக, ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை திறந்துள்ளன. ஆனால், ‘வலிமை’ போன்ற திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டது. இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.