இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை சமீபத்தில் அறிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். விராட் கோலிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கபட்டுள்ள நிலையில், இத்தொடரில் பல்வேறு சீனியர் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தொடர் ஃபார்ம் அவுட் காரணமாக இடம்பெறாத அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா தங்கள் பழைய ஃபார்மை மீட்க தற்போது ரஞ்சி தொடரில் அவரவர் அணிகளுக்காக ஆடிவருகிறார்கள். இஷாந்த் ஷர்மா அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இவர்களுடன் மற்றுமொரு சீனியர் வீரரான விக்கெட் கீப்பிங் பேட்டர் ரித்திமான் சாஹாவிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியின் பிரதான கீப்பராகக் கடந்த சில ஆண்டுகளாக ரிஷப் பண்ட்டே செயல்பட்டு வரும் நிலையில் அவருக்கு பேக்-அப்பாக ஒவ்வொரு தொடரிலும் இடம்பெற்றுவிடுவார் சாஹா. ஆனால், இம்முறை அவருக்குப் பதில் கே.எஸ்.பரத் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
சாஹாவிற்கு 37 வயது ஆகிவிட்டதென்பதால் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இயல்பே. ஆனால் தான் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பயிற்சியாளர் டிராவிட், பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் தன்னிடம் பேசியது பற்றி சாஹா கூறியுள்ளது தற்போது விவாத பொருளாகியுள்ளது.
இதுக்குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு ராகுல் டிராவிட் என்னை தனியே பேச அழைத்தார். ஆடும் லெவனில் இடம் பெறாதது குறித்துதான் அவர் பேச அழைக்கிறார் என்று நானும் சென்றேன். ஏனென்றால் நியூசிலாந்திற்கு எதிராக நான் கான்பூரில் ஆடியதை கங்குலி வெகுவாகப் பாராட்டி இருந்தார். அது என் நம்பிக்கையை பெருமளவு அதிகரித்திருந்தது.
ஆனால் என்னிடம் பேச தொடங்கிய ராகுல், ‘இதை உங்களிடம் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் அணி தேர்வுக் குழு புதிய கீப்பருக்கான தேடலில் இருக்கிறார்கள்’ என்றார். இதற்கான காரணம் என் வயதா அல்லது என்னுடைய உடற்தகுதியா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘அணி நிர்வாகத்தின் இந்த முடிவு, நீங்கள் கூறிய இரண்டின் காரணமாகவும் இல்லை. இப்போது அணியின் பிரதான கீப்பராகும் சாய்ஸில் நீங்கள் இல்லை. எனவே, அந்த இடத்துக்கு வேறொரு புதிய இளம் வீரரை மாற்று வீரராகத் தயார் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்’ என்றும் கூறினார்.
மேலும் டிராவிட், ‘வரவிருக்கும் இலங்கை டெஸ்ட் தொடரில் நீங்கள் இடம் பெறாமல் போனால் ஆச்சர்யபடுவதற்கில்லை. அதனால் உங்கள் எதிர்காலம் பற்றிய முடிவுகளை நீங்கள் எடுக்கும் நேரம் வந்துவிட்டது’ எனவும் அறிவுறுத்தினார். ஆனால் நான் இப்போதைக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கத் தயாராக இல்லை. ஏனென்றால் ஒரு வீரராக என்னுள் இன்னும் அதிக கிரிக்கெட் மீதமிருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று கூறினார் சாஹா.
இந்தியா திரும்பிய பிறகு, இந்தியத் தேர்வு கமிட்டியின் தலைவரான சேத்தன் ஷர்மாவும் இதே போன்ற செய்தியை சாஹாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் அனைத்து தொடர்களிலும் இளம் வீரருக்கே வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அதனால் அவரை ரஞ்சி தொடரில் பங்கேற்க அறிவுறுத்தியதாகவும் சாஹா கூறுகிறார். தன் சக வீரர்களான ரஹானே, புஜாரா ஆகியோர் ரஞ்சி தொடரில் விளையாடி வருகின்றனர். ஆனால் தன் மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடிவெடுத்திருப்பதால் சாஹா எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை.
இவை அனைத்தையும் சாஹா பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசிய நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து தன்னிடம் பேட்டி கொடுக்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அப்பத்திரிகையாளர் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாஹா, ‘இந்திய கிரிக்கெட்டிற்கு இத்தனை வருடங்கள் பங்காற்றிய வீரரை பத்திரிகையாளர் நடத்தும் விதம் இதுதான்’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து அப்பத்திரிகையாளரின் செயலைக் கண்டித்ததும் சாஹாவிற்கு ஆதரவாகவும் முன்னாள் வீரர்களான சேவாக், ஹர்பஜன், ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டிக்குப் பின்னான பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் டிராவிட்டிடம் சாஹா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர் சாஹாவின் கருத்து தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று கூறினார். மேலும், “இந்திய அணிக்கு அவர் ஆற்றிய பங்கு மிக பெரியது. அவர் மீது இருந்த மரியாதைக் காரணமாகத்தான் இவ்வுரையாடலை நான் மேற்கொண்டேன். ஏனென்றால் அவரிடம் நாங்கள் நேர்மையாக இருக்கவேண்டியது எங்கள் கடமை.
அணியில் உள்ள எல்லா வீரர்களிடம் இது போன்று உரையாடுவது எப்போதும் நடப்பதுதான். நான் சொல்கின்றவற்றை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. அவர்களின் எதிர்க்கருத்து என்னை காயப்படுத்தப்போவதும் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் அணியில் இல்லாத, விளையாடாத வீரர்களிடம் அதற்கான காரணங்களைத் தெளிவாக அவர்களிடத்தில் எடுத்துரைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
இந்தாண்டு இந்திய அணி இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகளை மட்டுமே விளையாட உள்ளது. அதனால் சாஹாவின் இடத்தில் புதிய இளம் வீரர் ஒருவரை கொண்டுவருவதாக நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் அவர் மீதுள்ள மரியாதை என்னிடத்தில் என்றைக்கும் தொடரும். ஒரு அணியாக முன் செல்வதே எனக்கு முக்கியம்” இவ்வாறு பதிலளித்தார் டிராவிட்.