“அதிமுக-வோ  அடையாளம்; சினிமாவிலோ அதிகாரம்”- `அசுர வளர்ச்சி' அன்புச் செழியன்!

அ.தி.மு.க வில் மாவட்ட அளவிலான பொறுப்பில் உள்ள ஒருவரின் இல்லத் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர்கள் முதல் இந்நாள் முதல்வர் வரை வருகை தருகிறார்கள். கோலிவுட்டின் உச்ச நடிகர்களும் விருந்தினர்களாக இந்தத் திருமணத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செல்வாக்குடன் நடந்த திருமணம் சினமா பைனான்சியர் அன்புசெழியன் மகள் திருமணம்.

சுஷ்மிதா- சரண்

திருமணத்திற்கு வந்த திரைத்துறையினர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதைவிட மணமகளின் அப்பாவான அன்புசெழியனிடம் தங்கள் வருகையை உறுதிசெய்வதில் தான் குறியாக இருந்தனர். திரைத்துறைக்குள் தனி சாம்ராஜ்யத்தை அன்புசெழியன் கட்டமைத்திருப்பது அவரது மகள் திருமணத்தில் பட்டவர்த்தனமாக தெரிந்தது. சரி,யார் இந்த அன்புசெழியன் என்று விசாரித்தால் ஆந்திர பட பாணியில் அவரது செயல்பாடுகளை பற்றி அடுக்குகிறார்கள் அன்புசெழியனுக்கு நெருக்கமானவர்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே உள்ள பம்மனேந்தல் கிராமம்தான் அன்புச் செழியனின் சொந்த ஊர்.

இராமநாதபுரத்தில் நிலவும் வறட்சியால் தொழில்வாய்ப்பு தேடி மதுரை பக்கம் ஒதுங்கினார் அன்புச் செழியன். அதற்குக் காரணம் அன்றைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் மதுரையில் தொழில் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதோடு அன்றைக்கு மதுரையில் பவுர்ஃபுல்லாக இருந்த அழகிரியின் ஆசியில் முதுகுளத்துார் பகுதியைச் சேர்ந்த பலரும் வட்டித் தொழிலில் கொடிக்கட்டிப் பறந்து வந்தனர். அதே பாணியில் அன்புசெழியனும் மதுரைக்குத் தனது இருப்பிடத்தை மாற்றினார். கையில் வைத்திருந்த கொஞ்சம் பணத்தை வைத்து கடைகளுக்கு வட்டிக்கு விடும் வேலையில் இறங்கினார்.

அப்போது மதுரை சேர்ந்த ஒருசிலர் சினிமாவிற்கு பைனான்ஸ் செய்வதும், திரைப்படங்களை விநியோகம் செய்யும் வேலையில் இருந்தனர். அவர்களது நட்பு அன்புசெழியனுக்கு கிடைக்க, அவர்களிடம் “நானும் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்கிறேன்” என்று என்ட்ரி கொடுத்தார். அப்படி 2000-ம் ஆண்டுக்கு முன்பாக சிறிய அளவில் சினமா பைனான்சியராக உள்ளே நுழைந்தவர் இன்று தமிழ் சினமாவையே தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்.

அன்புச்செழியன்

2001-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியை பிடித்தவுடன் அப்போது அ.தி.மு.கவின் அதிகார மையமாக இருந்தவர்களின் தொடர்பு அன்புசெழியனுக்குக் கிடைக்க சினமாத்துறைக்குள் இவரது வளர்ச்சி வேகமெடுத்தது. மதுரையிலிருந்து கொண்டே சென்னையில் பைனான்ஸ் செய்து வந்தார் அப்போது திரையுலகில் பைனான்ஸ் தொழிலில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் அதிகம் இருந்தது. சரி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பைபான்ஸ் கொடுக்கிறராரே என்று பலரும் இவரிடம் பணம் வாங்கினார்கள். பைனான்ஸ் கொடுத்த ஆரம்பத்தில் குறைந்த வட்டியிலேயே பணம் கொடுத்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியைத் தராவிட்டால் வட்டியின் அளவு அதிகரித்தது. இப்படி வட்டிக்கு வட்டி போட்டு சினிமாத்துறைக்குள் கோலோச்ச ஆரம்பித்தவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் எந்த படம் ரிலீஸாகவேண்டும் என்றாலும் அன்புச் செழியன் தயவு வேண்டும் என்கிற நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்.

சினமா தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர் என்று பல வழிகளில் இன்று சினிமாத்துறைக்குள் அன்புச் செழியன் அதிகாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. ஆனால் பணம் கேட்டு போகும் எந்த தயாரிப்பாளருக்கும் பணம் இல்லை என்று சொன்னதில்லை. பணத்தைக் கொடுப்பவர், பணம் திரும்ப கைக்கு வரவில்லை என்றால், அடுத்து படத்தையே அதற்கு ஈடாக வாங்கிவிடுவார். இவரால் ஏற்றம் பெற்றவர்கள் சிலர் என்றால், பாதிக்கப்பட்டவர்கள் பலர். ஆனால், இந்த சினிமாத்துறைக்கு அரசியல் புள்ளிகளின் பணத்தை முதலீடாக கொண்டு வந்தததில் அன்புசெழியன் பங்கு அதிகம். இன்றைக்கு அவர் பைனான்ஸ் செய்யும் பணத்தில் அரசியல் புள்ளிகளின் கரண்சியுமே இருக்கிறது.

ஸ்டாலினுடன் அன்புசெழியன்

இப்படி தனித்துவமான அதிகாரத்துடன் வலம்வரும் அன்புசெழியனுக்கு அவரது தம்பி அழகரும் பெரும் பலம். வசூலாகாத பணத்தை வசூல் செய்வது முதல், பஞ்சாயத்து விவகாரம் வரை கவனித்துக்கொள்வது அவர் தம்பி அழகர் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக்கொண்டதற்கு அன்புச் செழியனே காரணம் என்று கூறப்பட்டது. அப்போது போலீஸார் இவரை வலைவீசித் தேடினார்கள். ஆனால் இவர் மறைந்திருந்ததோ அன்றைக்கு அ.தி.மு.கவில் உச்ச பவரில் இருந்த ஒருவரின் நிழலில், 2020-ம் ஆண்டு இவர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானரித்துறை சோதனை நடந்து பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தையும் அள்ளிச்சென்றனர்.

இப்போது இவருடைய மகள் சுஷ்மிதாவிற்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உறவினரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் மகன் சரணுக்கும் சென்னையில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு அ.தி.மு.க, தி.மு.க என்று பாரப்பட்சம் பார்க்காமல் அனைவருக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்.இந்த திருமணம் முடிந்த கையோடு அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவுக்கு அன்புசெழியன் தாவப்போவதாகவும் ஒரு செய்தி கசிந்தது. உதயநிதியுடன் அவருக்கு உள்ள நட்பினால் இந்த முடிவை அவர் எடுக்கப்போவதாக செய்திகள் வந்தன. இதுகுறித்து அன்புச் செழியனுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால் “ஆரம்பத்தில் அன்புசெழியன் தி.மு.க அனுதாபியாக இருந்தவர்தான். ஒருகட்டத்தில் சினமா பைனான்சில் அவர் கோலோச்சியதற்கு அ.தி.மு.க பிரமுகரின் ஆசியும் முக்கியமானதாக இருந்தது. இதனால் அ.தி.மு.கவில் உறுப்பினராக சேர்ந்து இன்று மதுரை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகியாகவும் இருக்கிறார்.

ரஜினியுடன் அன்புசெழியன்

இவர் தி.மு.க வில் உள்ள அனைவருடனும் நல்ல நட்பில் தான் இருக்கிறார். அதற்காக இவர் தி.மு.கவுக்கு போவார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதில் சில சிக்கல் இருக்கிறது. குறிப்பாக தி.மு,க வுக்கு இவர் சென்றால் சினமா தொழிலில் கூட இவருக்கு சிக்கல் வரும். அதனால் நட்போடு தி.மு.க-வை அணுகவே அன்புச் செழியன் விரும்புகிறார்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.