ஆந்திர மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மேகபதி கவுதம் ரெட்டி திடீரென மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 51. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த மேகபதி கௌதம் ரெட்டி, கடந்த ஒரு வாரமாக துபாயில் முகாமிட்டு தொழில் முதலீடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் திரும்பிய அவர் வீட்டில் திடீரென மயங்கி விழவே, அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.பி.ஆர். உள்ளிட்ட உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் அமைச்சர் மேகப்தி கௌதம் ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி மறைவுக்கு, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்