ஹைதராபாத்: ஆந்திர மாநில ஐடி துறை அமைச்சர் கவுதம் ரெட்டி இன்று காலை மாரட்டைப்பால் காலமானார். அவருக்கு வயது 50.
முன்னதாக, ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு காலை 7.45 மணியளவில் மயங்கிய நிலையில் கவுதம் ரெட்டி கொண்டு வரப்பட்டுள்ளார்.
அவரைப் பரிசோதித்த அப்பல்லோ மருத்துவர்கள், அவர் அழைத்து வரப்பட்டபோதே பேச்சு, மூச்சற்ற நிலையில் கொண்டுவரப்பட்டதாகவும் அவருக்கு வீட்டிலேயே பலத்த மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிபிஆர் உள்ளிட்ட முதலுதவிகள் செய்யப்பட்டன. சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.
அவரது மகன் மேகபதி ராஜமோகன ரெட்டி, தந்தை மறைவுச் செய்தியறிந்து துபாயிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார். துபாயில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் ஆந்திர அரசு சார்பில் கலந்துகொள்ள அவர் சென்றிருந்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர்சி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுதம் ரெட்டி, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரியவர் எனக் கூறப்படுகிறது. பெருந்தொற்று காலத்தில் அமைச்சரவையில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வழிகாட்டுதலின் படி, பெருந்தொற்று காலத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்காக மீட்புத் திட்டங்களை அவர் அமல்படுத்தியது வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் கவுதம் ரெட்டி மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.