திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திடீரென நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, இவர் 2006-11 திமுக ஆட்சியில் முதலைமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக பதவி வகித்தார். முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி வட சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க, சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்துக்கு நேரில் வந்து ஆற்காடு வீராசாமியை நலம் விசாரித்தார். பின்னர், அவருடைய மகன் கலாநிதி வீராசாமியிடம் தந்தையின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து நலம் குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார். சுமார் 15 நிமிட சந்திப்புக்குப் பிறகு, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு புறப்பட்டு சென்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திடீரென சென்னை வந்து ஆற்காடு வீராசாமியை சந்தித்துவிட்டு சென்றது குறித்து கலாநிதி வீராசாமி கூறுகையில், நட்பின் அடிப்படையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேரில் வந்து நலம் விசாரித்து விட்டு சென்றதாகக் கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து திமுக எம்.பி கலாநிதி வீராசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “துணை குடியரசுத் தலைவரும் எனது தந்தையும் இருவருமே நல்ல நண்பர்கள். இங்கு சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். எனது தந்தைக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதனால், அவர் எப்படி இருக்கிறார் என்று குடியரசுத் துணைத் தலைவர் நேரில் வந்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்.” என்று கூறினார்.
ஆற்காடு வீராசாமியின் உடல்நிலை குறித்து கூறிய கலாநிதி வீராசாமி, “எனது தந்தைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். ஒரு மாதம் முடிந்திருக்கிறது. இன்னும், 2 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்னும் 20 நாட்களில் நடக்க ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். தற்போது நன்றாக இருக்கிறார்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“