உலகின் மூத்த மொழிகளில் ஒன்று செம்மொழியான தமிழ் மொழி. இது போன்ற பழமைமிக்க மொழிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி தினம் ‘பிப்ரவரி 21’-ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ‘பன்மொழி கற்றலுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: அது சார்ந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற கருப்பொருளை முன்னெடுத்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு.
உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் மொழிகள் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் அதில் வெறும் சில நூறு மொழிகள்தான் கல்வி முறையில் இடம் பெற்றுள்ளது. அந்த சில நூறு மொழிகளில் நூற்றுக்கும் கீழான மொழிகள் தான் டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் சுமார் 40 சதவீத மக்கள் அவர் பேசும் அல்லது புரிந்து கொள்ளும் மொழியில் கல்வி பெறுவதில்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தொழில்நுட்பம் மொழியியல் பன்முகத்தன்மையை பாதுகாக்க உதவும் என நம்புவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தாய்மொழி தினத்தின் வரலாறு!
வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 1952-ஆம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் ஜனவரி 1998-இல் முன்மொழிந்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 1999-ஆம் ஆண்டு அந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து கடந்த 2000 வாக்கிலிருந்து உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM