அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அவரை உடனடியாக பாஜகவிலிருந்து நீக்க வேண்டும். அவரை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கர்நாடக
காங்கிரஸ்
தலைவர் டி.கே.சிவக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
ஷிவமோகாவில் பஜ்ரங் கட்சியின் தொண்டரான 26 வயது ஹர்ஷா நான்கு பேர் கொண்ட கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் இந்த கொலைக்கும் ஹிஜாப் விவகாரத்துக்கும் தொடர்பு இல்லை. இது முன்விரோதம் காரணமாக நடந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். கொலை செய்யப்பட்டவருக்கும், கொலையாளிகளுக்கும் இடையே ஏற்கனவே நட்பு இருந்து பின்னர் எதிரிகளாக மாறியுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது என்று கூறினர்.
ஆனால் பாஜகவைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஈஸ்வரப்பாவோ, இது முஸ்லீம் குண்டர்களால் நடத்தப்பட்ட கொலை. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் பேச்சினால் தூண்டப்பட்டுதான் இவர்கள் இந்தக் கொலை செய்துள்ளனர் என்று முஸ்லீம்களை இழுத்து பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்களும் ஈஸ்வரப்பாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஈஸ்வரப்பா ஒரு பைத்தியம் என்று டி.கே.சிவக்குமார் கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில், ஈஸ்வரப்பா ஒரு பைத்தியம். ஈஸ்வரப்பாவின் மூளைக்கும், வாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சித்தராமையாவே சாடியுள்ளார். ஈஸ்வரப்பா மீது தேசத் துரோக வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும். அவரை
பாஜக
உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.
நாட்டு மக்கள் யாருமே இவரை மன்னிக்க மாட்டார்கள். காவிக் கொடியை தேசியக் கொடியாக செங்கோட்டையில் ஏற்றுவோம் என்று பகிரங்கமாக பேசியவர் இவர். ஆனால் பாஜக இதுகுறித்து வாயே திறக்காமல் மெளனம் காப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை என்று கூறியுள்ளார் டி.கே.சிவக்குமார்.
முதல்வர் கருத்து:
இந்த கொலை தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ஹர்ஷா என்பவர் ஷிவமோகாவில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சில தடயங்கள் கிடைத்துள்ளன. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்றார்.
முதல்வரே இந்தக் கொலை தொடர்பாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில், பிற முக்கிய அமைச்சர்களும் கூட கவனத்துடன் கருத்துக்களைக் கூறியுள்ள நிலையில், மூத்த தலைவரான ஈஸ்வரப்பா முஸ்லீம்களை இந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி பேசியிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.