கீவ்-ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், உக்ரைனை விட்டு வெளியேற, இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய துாதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. மறுபுறம், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள், கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.இதையடுத்து, உக்ரைனை விட்டு வெளியேறும்படி, அங்குள்ள இந்தியர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இந் நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உக்ரைனில், அத்தியாவசிய பணியில் இல்லாத இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் அனைவரும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.உக்ரைன் – இந்தியா இடையில் குறிப்பிட்ட நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அவற்றை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்திய துாதரகத்தில் பணியாற்றும் ஊழியர்குடும்பத்தினரும் உடனடியாக வெளியேற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உக்ரைனுக்கு விமானங்கள்உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு, நாளையும், 24 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும், மூன்று விமானங்களை, ‘ஏர் இந்தியா’ நிறுவனம் இயக்க உள்ளது. அதற்கு, ஏர் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தில், முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement