அபுதாபி,
உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதற்கிடையில் உக்ரைனில் ராணுவ வீரர்கள் மற்றும் ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இவற்றின் காரணமாக உக்ரைனில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. அதே சமயம் அங்கிருந்து தங்கள் நாட்டு குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் உக்ரைன்-ரஷியா நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அந்நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அமீரக அரசு அறிவித்துள்ளது. இதில் அங்குள்ள நிலைமை கண்காணிக்கப்பட்டு சீரானவுடன் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கும் என அரசு வெளியிட்ட அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.