தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தெரிவித்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம்தேதி நடைபெற்றது. தேர்தல் எந்தவித தடையும் இல்லாமல் நல்லபடியாக நடந்து முடிந்ததாக திமுக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், கோவை, நெல்லை, திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்து, புகார் தெரிவித்திருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக வீடியோ தொகுப்புகளைப் பதிவிட்டு, அதில், “எந்த வித தடையும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததாக திமுக அரசு சொல்கிறது. நான் இணைத்துள்ள இந்த வீடியோ தொகுப்புகள் மூலம் தமிழக அரசு தனது அதிகாரத்தை எந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்துள்ளது, எத்தனை மோசடிகளில் ஈடுபட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் அத்துமீறல்கள், மோசடிகள் நடைபெறும் வரை இந்திய தேர்தல் ஆணையம் கண்களை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்காது என நம்புகிறேன்” என்று இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்திருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
அண்ணாமலையின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், “நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தாது. இவற்றை விதி எண் 243 கே மற்றும் 243 இசட் ஏ- யின் படி மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது. எனவே உங்கள் புகாரை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்புங்கள் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், உங்களுக்கு தெரியுமா என தேர்தல் ஆணைய பக்கத்திலிருந்து ஒரு தகவலையும் எடுத்து போட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 324 இன்படி குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தலை கண்காணிப்பது, தேர்தலை நடத்துவது, கட்டுப்படுத்துவது, வழிகாட்டுவது உள்ளிட்டவைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்யும். உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் வராது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்தவில்லை, மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவியுங்கள் என்று பதில் அளித்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திடம் தவறான முகவரியில் புகார் தெரிவித்ததைக் குறிப்பிட்டு, ஐ.பி.எஸ் படித்து காவல்துறையில் பணியாற்றியவருக்கு இதுகூட தெரியாதா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“