புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கான மூன்றாம் கட்ட தேர்தலில் நேற்று கான்பூரில் ஹிஜாப் விவகாரம் எழுந்தது. இதில் முஸ்லிம் பெண்களின் கடும் எதிர்ப்பால் சுமார் அரைமணி நேரம் வாக்குப்பதிவு முடங்கியதாகத் தெரிந்துள்ளது.
நேற்று உ.பி.யின் 16 மாவட்டங்களின் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதில், கான்பூர் நகரின் சிவில்லைன் பகுதியிலுள்ள ஹட்ஸன் பள்ளியிலிருந்த வாக்குச்சாவடியில் மட்டும் ஹிஜாப் விவகாரம் எழுந்தது.
இங்கு காலை வாக்குப்பதிவு செய்ய ஹிஜாப்புகளுடன் வந்த முஸ்லிம் பெண்களிடம் அங்கிருந்த தேர்தல் அலுவலர் அவற்றை அகற்றி விட்டு வருமாறு கூறியுள்ளார். இதற்கு அப்பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்களிக்க மறுத்துள்ளனர்.
தொடர்ந்து அங்கு வாக்களிக்க ஹிஜாப் அணிந்து வந்த மற்ற பெண்களும் அவர்களுடன் இணைந்து வாக்குச்சாவடி முன் கூட்டம் கூடி எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனால், ஹட்ஸன் பள்ளியின் வாக்குச்சாவடி முன் பரபரப்பு நிலவியது.
இது குறித்து ஹட்ஸன் பள்ளியின் முன்பிருந்த முஸ்லீம் பெண்கள் கூறும்போது, ‘‘எங்கள் அடையாளங்களை உறுதிசெய்ய நாம் வாக்குச்சாவடியினுள் முகத்தை காட்டத் தயார்.
ஆனால், அதற்காக முழு ஹிஜாபையும் வெளியிலேயே கழட்டி விட்டு வர முடியாது. இதற்காக வாக்குச்சாவடியில் பெண் அலுவலர் இருப்பது அவசியம்.’’ எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு கான்பூர் போலீஸார் நேரில் வந்து இரண்டு தரப்பினரிடம் பேசினர். பிறகு பிரச்சனை பெரிதாகாமால் சமாதானம் பேசி அந்த முஸ்லீம் பெண்களின் வாக்குகளையும் பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கான்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி எந்த கருத்தையும் கூட விரும்பவில்லை. எனினும், இந்த ஹிஜாப் பிரச்சனை மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் அடங்கியது பாரட்டப்பட்டது.
ஏனெனில், உ.பி.யில் அதிகமுள்ள முஸ்லிம்களில் ஹிஜாப் அணியும் பெண்களும் மிக அதிகமாக உள்ளனர். பிறகு அடுத்த மார்ச் 7 வரை தொடரும் நான்கு கட்ட வாக்குப்பதிவுகளிலும் இந்த ஹிஜாப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தால் சமாளிப்பது சிக்கலாகி விடும் எனக் கருதப்படுகிறது.