பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யபுக்கு தமிழ் சினிமாவின் மேல் எப்போதும் தனி ஆர்வம் உண்டு. குறிப்பாக இயக்குநர்கள் பாலா, சசிகுமார், அமீர் ஆகியோர் இயக்கிய படங்கள் குறித்து எப்போதும் சிலாகித்துப் பேசுவார். தன்னுடைய கல்ட் க்ளாசிக் படமான ‘கேங்ஸ் ஆஃப் வஸேபூர்’ படம் உருவாகப் பெரிய இன்ஸ்பிரேஷன் இவர்கள்தான் என நிறையப் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். தன்னுடைய படங்களில் அவர்களுக்கு ‘தேங்க்ஸ்’ கார்டும் போட்டிருக்கிறார். இவர்களுக்குள் நல்ல நட்பும் நிலவி வருகிறது.
இதனிடையே இயக்குநர் சசிகுமார் சமீபத்தில் மும்பைக்குப் போக, அங்கே இயக்குநர் அனுராக் காஷ்யப்பைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். என்னதான் அடிக்கடி அவர்கள் போனில் பேசிக்கொண்டாலும் நேரில் பேசிக்கொள்வது போலாகுமா?! அதனால் இந்தச் சந்திப்பு அவர்களின் மனதுக்கு நெருக்கமானதாகவும், பிரியமாகவும் அமைந்துவிட்டது.
இருவரும் இரண்டு மணி நேரத்திற்குமேல் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். பாலிவுட், கோலிவுட் சங்கமித்ததால் என்ன ஸ்பெஷல் என்று அறிந்துகொள்ள இயக்குநர் சசிகுமாரிடமே அந்தச் சந்திப்பு பற்றிக் கேட்டோம்.
“ரொம்ப அருமையான சந்திப்பு. இத்தனை நாள் பார்க்காமலிருந்ததை இந்தச் சந்திப்பு மறக்கடித்துவிட்டது. ‘நீங்க எப்போ டைரக்ட் செய்யப்போறீங்க… பார்க்க ஆசையாகக் காத்திருக்கிறேன்’ என்று அனுராக் கேட்டார். ‘இந்த வருடத்தில் நான் டைரக்ஷன் செய்யும் படத்தை ஆரம்பித்துவிடுவேன். அதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்கின்றன’ என நான் சொன்னேன். அதைக் கேட்ட அவருக்கு ரொம்ப சந்தோஷம். ‘எனக்கு இது உண்மையிலேயே சந்தோஷமான செய்தி’ என்று அவர் மகிழ்ந்து பேசினார். அதேபோல், அவரின் அடுத்தடுத்த படங்களின் செய்திகளையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். மொத்த சந்திப்புமே பிரமிப்பாக இருந்தது. இரண்டு பேருக்கும் அடுத்தடுத்த வேலைகள் இருந்ததால் மட்டுமே அந்தச் சந்திப்பை முடித்துவிட்டுப் பிரிந்தோம்” என்று நெகிழ்கிறார் சசிகுமார். அவரது குரலில் நிஜ சந்தோஷத்தை உணரமுடிந்தது.