புதுடெல்லி,
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்டு விளையாடுவதால், உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடராக உள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடருக்கான மவுசு ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு எகிறிக் கொண்டே செல்கிறது. விளம்பரம், ஸ்பான்சர் மூலம் வருவாய் கொட்டுவதால், முன்னணி நிறுவனங்களும் ஐ.பி.எல்லை விளம்பர மீடியமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
வீரர்களுக்கும் கோடிகளில் பணம் கிடைப்பதால், ஐ.பி.எல் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதில், வீரர்கள் அணியும் ஷூ, உடை, கையில் அணியும் பேண்ட் என அனைத்திலும் தங்களது நிறுவனத்தை விளம்பரப்படுத்த நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர். இதனால் ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமம் பெறும் நிறுவனத்துக்கு வருவாய் பல லட்சம் கோடி ரூபாய் கிடைக்கிறது.
இந்நிலையில் 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2023-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரையிலான போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை வழங்கும் இணையவழி ஏலம் நடைமுறையை இந்த வாரத்தில் தொடங்கி 2 மாதத்துக்குள் முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஸ்டார், அமேசான், ரிலையன்ஸ், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் உரிமத்தை பெற போட்டியிடும் என்று தெரிகிறது.
இந்த முறை பெரிய அளவில் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ‘இந்த போட்டிக்கான டி.வி. உரிமத் தொகை, ஐ.பி.எல். கிரிக்கெட் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்