டெல்லி: கடந்த 9 மாதங்களில் ரயில்களில் பயணசீட்டு இன்றி பயணம் செய்த 1 கோடியே 78 லட்சம் பேரிடம் இருந்து 1,017 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தோர் பற்றிய விவரங்களை கேட்டிருந்தார். அதில் 2021- 22ம் நிதியாண்டில் பயணசீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்தவர்கள் விவரங்களை தருமாறு கேட்டிருந்தார். அதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்த பதிலில், நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த 2020, 2021ம் நிதியாண்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் டிக்கெட் இன்றி பயணித்தோர் எண்ணிக்கை 27.57 லட்சம் என்றும் அவர்களிடம் இருந்து 143.82 கோடி ரூபாய் அபராதமாக பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் டிக்கெட் இன்றியும், கூடுதல் லக்கேஜ் உடனும் 1 கோடியே 78 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இவர்களிடம் இருந்து 1,017 கோடி ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை கூறியுள்ளது.