ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் பார்வையிட்டார்.
12ஆவது முறையாக நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் 60க்கும் மேற்பட்ட கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், 55 போர்விமானங்கள் பங்கேற்றன. அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள கடற்படைக் கட்டுப்பாட்டு மையத்தின் போர்க்கப்பல்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றன.
44 போர்க்கப்பல்கள் நான்கு வரிசையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்ததை, ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணித்தபடி சென்று, குடியரசுத்தலைவர் பார்வையிட்டார். அப்போது, அந்தந்த கப்பல்களின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அணிவகுத்து நின்று, குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார்.
அணிவகுப்பு நிகழ்ச்சியில், கடற்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம், ஐஎன்எஸ் வேலா ஆகிய நீர்மூழ்கி கப்பல்களும் இடம் பெற்றிருந்தன. அணிவகுப்பில் பங்கேற்ற 60கப்பல்களில், 47கப்பல்கள் இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை.
எனவே இந்த அணிவகுப்பு, தற்சார்பு இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர்க்கப்பல்களின் அணிவகுப்பைத் தொடர்ந்து, கடற்படை விமானங்களின் அணிவகுப்பும் நடைபெற்றன. கடற்படையின் சேத்தரக், காமோவ் ரக ஹெலிகாப்டர்கள், டார்னியர் மற்றும் மிக்29-கே ரக விமானங்களும் இந்த நிகழ்ச்சியில் அணிவகுத்துச் சென்றன.
சமீபத்திய செய்தி: வாக்குப்பதிவின்போது தாக்குதல் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM