சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பல்வேறு இடங்களில் திமுகவினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரத்தில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.
அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம், அவரது கையை கட்டுங்கள் என்று கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.
ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் என்று தெரியவந்துள்ளது. அவரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
கள்ள ஓட்டு போட முயன்றவரை காவல்துறையில் ஒப்படைத்தது குற்றமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது தவறு என முதல்வர் கூறுகிறாரா? எதையும் சட்டரீதியாக சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது வெற்றி பெறும் அதிமுக வேட்பாளர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வாய்மொழி உத்தரவுகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வார்டு முடிவுகளை அறிவித்து, சான்றிதழ்களை வழங்கிய பிறகே அடுத்த வார்டு வாக்குகளை எண்ண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.