லாலு பிரசாத் யாதவ்
பீகாரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் ஏற்கெனவே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதுவரை அவருக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், டோர்தனா கருவூலத்திலிருந்து ரூ.139.35 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான ஐந்தாவது ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி
சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
அண்மையில் தீர்ப்பு வழங்கியது. ஆனால், குற்றவாளிகளின் தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான ஐந்தாவது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.