தஞ்சாவூர்: நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை விற்ற விவசாயிகளுக்கு உடனுக்குடன் அதற்கான ரசீதை வழங்க ஏதுவாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கையடக்க கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்கும்போது, அவர்களுக்கு முன்பெல்லாம் கொள்முதல் பணியாளர்கள் கையால் எழுதப்பட்ட ரசீதை வழங்கினர். பின்னர், டேப்ளாய்டு இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் கொள்முதல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதனை ப்ளூடூத் மூலம் இணைப்பு பெற்று, தனியாக பிரின்டரில் ரசீதை வழங்கினர். இதில் பல இடங்களில், பல நேரங்களில் இணையதள இணைப்புகள் சரிவர கிடைக்காததால் அவ்வப்போது பணியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் முதற்கட்டமாக பிஓஎஸ் எனப்படும் கையடக்க கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 50 கொள்முதல் நிலையங்களில் இந்த இயந்திரம் கொள்முதல் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகளின் பெயர், ஊர், சர்வே எண், வங்கி விவரம், எவ்வளவு நெல் எடை, அதற்கான விற்பனை தொகை எவ்வளவு என அனைத்து விவரங்களும் பதிவு செய்து, உடனுக்குடன் கணினி ரசீது வழங்கப்படுகிறது. இதனை கொள்முதல் பணியாளர்கள் எளிதில் கையாளுவதால் அவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கொள்முதல் பணியாளர்கள் கூறுகையில், “கொள்முதல் நிலையங்களில் முன்பெல்லாம் டேப்ளாய்டு மூலம் விவரங்கள் பதிவு செய்தோம். இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்தது. தற்போது பிஓஎஸ் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் நடத்துநர்கள் எப்படி டிக்கெட்டை வழங்குகிறார்களோ அதேபோல், விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் தொடர்பான ரசீதை நாங்கள் உடனடியாக வழங்குகிறோம். இதை கையாளுவது எளிதாக உள்ளது. பணியாளர்கள் மத்தியில் இந்த இயந்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போதைய கொள்முதல் பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் இந்த இயந்திரத்தை வழங்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளர் என்.உமாமகேஸ்வரி கூறுகையில், “பிஓஎஸ் இயந்திரம் தற்போதைய சம்பா கொள்முதல் பருவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 50 கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கியுள்ளோம். மீதமுள்ள 460 கொள்முதல் நிலையங்களுக்கு விரைவில் வழங்கப்படும். இதனால் கொள்முதல் பணிகள் விரைவுபடுத்தப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 2.18 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.