புதுடெல்லி: அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள குடிமக்களின் அடிப்படை கடமை தொடர்பான விவகாரத்தில் விரிவான சட்ட விதிமுறைகளை உருவாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துர்க்கா தத் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘நாடு முழுவதும் தற்போது அதிக அளவில் சட்டவிரோதமான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தவறாக கையிலெடுத்து சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் நடத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்க அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவை மாற்றப்பட வேண்டும். காட்சி ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு விசயங்களுக்கு மதசாயம் பூசப்படுகிறது.எனவே குடிமக்களின் அடிப்படை கடமையை உணர்த்தும் வகையிலும் எதிர்காலத்தில் ஒற்றுமையுடன் நிற்கும் சூழலை ஏற்படுத்தும் வகையிலும் வழிகாட்டு நெறிமுறையை வகுக்க வேண்டும். அதற்காக உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அதுபோன்று அரசியலமைப்பு 51ஏ சட்ட விதியில் கூறப்பட்டுள்ள குடிமக்களின் அடிப்படை கடமைகளை அமல்படுத்த வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ‘‘குடிமக்களின் அடிப்படை கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன? அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள குடிமக்களின் அடிப்படை கடமைகளை அவர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில் விரிவான சட்ட விதிமுறைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். அதுகுறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என தெரிவித்தனர்.