“தீராக்காதல் திருக்குறள்” திட்டத்திற்குத் தமிழக அரசு ஒருகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருக்குறளை பல்வேறு வகைகளில் இளம் சமூகத்திடம் கொண்டுசேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே 1330 திருக்குறளை மனப்பாடம் செய்தவர்களுக்கு பரிசுகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் மாதம் “குறளோவியம்” என்கிற தலைப்பில் திருக்குறளை மையமாக வைத்து ஓவியப்போட்டியை நடத்தினார்கள். தமிழ் வளர்ச்சித்துறையின்கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் இந்த ஓவியப் போட்டியை நடத்தியிருக்கிறார்கள்.
பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி கல்லுாரி மாணவர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். திருக்குறளில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஒரு குறளைத் தேர்வு செய்து, அந்தக் குறளின் பொருளுக்கு தகுந்த வகையில் ஓவியம் வரைவதே இந்த குறளோவியப்போட்டி. இந்தப் போட்டியில் 13,000 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். முதல்பரிசாக ரூ.50,000 , இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட்டது. இதைத் தவிர அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் வரைந்த மூன்று சிறந்த ஓவியங்களுக்கு தலா இருபதாயிரம் ரூபாயும் இந்த போட்டியின் முடிவில் வழங்கப்பட்டது. இதைத்தவிர பதிமூன்றாயிரம் ஓவியங்களில் சிறந்த 365 ஓவியங்களைத் தேர்வு செய்து, அந்த ஓவியங்களையும், அதற்கான குறளையும் இணைத்து நாட்காட்டியாக தமிழ் இணைய கல்விகழகம் உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் இந்தக் குறளோவிய நாட்காட்டி என பெயரிடப்பட்ட இந்த நாட்காட்டி விரைவில் தமிழக அரசால் விற்பனையும் செய்யப்பட உள்ளது. மிகவும் நேர்த்தியாக மாணவர்கள் வரைந்த ஓவியங்களோடு, திருக்குறளும் அதற்கான பொருள், அன்றைய தேதி, கிழமை உள்ளிட்ட விவரங்களையும் இந்த நாட்காட்டியில் வடிவமைத்துள்ளனர். தமிழ் இணையக்கல்வி கழகத்தின் இயக்குநர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் நம்மிடம் “ தமிழ் மொழி மீது மாணவர்களுக்கான ஈடுபாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் மொழிக்கு தனித்துவமாக உள்ள திருக்குறளை வரும் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவே தீராக்காதல் திருக்குறள் என்கிற திட்டத்தை அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த குறளோவியம் என்கிற ஓவியப்போட்டியை அரசு நடத்தி அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதன்மூலம் திருக்குறளை நோக்கி வரும் தலைமுறை மாணவர்கள் கவனம் கொள்ள நேரிடும். அதே போல் அடுத்தகட்டமாக திருக்குறள் நாட்டிய நாடகம் விரைவில் நடத்ததிட்டமிட்டுள்ளது அரசு. அதில் திருக்குறளின் பொருளை அடிப்படையாக கொண்டு, நாட்டிய வடிவலான நாடகமாக இந்த நாடகம் அமைய உள்ளது” என்றார்.
உலகப்பொதுமறையான குறளுக்கு குரல் கொடுக்கும் திட்டமாக மாறியுள்ளது தமிழக அரசின் தீராக்காதல் திட்டம்.