கான்பூர்
தாம் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் பாஜக மேயர் பிரமீளா பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
கான்பூர் நகர மேயர் பிரமீளா பாண்டே அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகும், இவரை மக்கள் ‘ரிவால்வர் தீதி (அக்கா)’ என்று அழைத்து வருகின்றனர். இதற்கு காரணம், இவர் மேயர் ஆவதற்கு முன்பு உறுப்பினராக இருந்த நேரத்தில், அவர் தனது உரிமம் பெற்ற ரிவால்வருடன் ஜீப்பில் வலம் வருவார். ஆகவே அவரை ‘ரிவால்வர் தீதி’ என்று அழைப்பார்கள். இவர், தனது கையால் பாம்புக்கு உணவு கொடுத்த வீடியோ வைரலானது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று 59 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக பிரமிளா பாண்டே நேற்று பிற்பகல் ஹட்சன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்றார். அவர் தான் வாக்களிப்பதை தனது செல்போன் மூலம் படம் பிடித்த அவர், அது தொடர்பான வீடியோவையும், புகைப்படத்தையும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்தார்.
இவை பகிரப்பட்ட சில மணிநேரங்களில், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தேர்தலில் வாக்களிப்பது தனி நபர் ரகசியம் என அரசியலமைப்புச் சட்டம் கூறும் போது, அதனை மீறும் வகையில் பிரமிளா பாண்டே செயல்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதை அடுத்து, கான்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பிரமிளா பாண்டே மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.