சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியலும் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீடு புகுந்து எனது தந்தையை போலீசார் பலவந்தமாக இழுத்து சென்றுள்ளனர் என்றும், கைது பற்றி எந்த விவரமும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் குற்றம்சாட்டி உள்ளார்.
ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவர்களை கைது செய்திருப்பது தமிழக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும், அவரை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.