திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. தொற்று பரவல் குறைந்ததால் மீண்டும் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இது சம்பந்தமாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தலைமையிலான கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. அப்போது ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிப்பது என்றும் சேவை கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கல்யாண உற்சவத்திற்கு ரூ.1000, தோமாலை, சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகளுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த கட்டணங்கள் 2 மடங்கு உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
வி.ஐ.பி கடிதம் பெற்று ஏராளமான பக்தர்கள் ஆர்ஜித சேவைகளில் கலந்து கொள்வதால் சாமானிய பக்தர்கள் தரிசனம் செய்வது தடைபடுகிறது.
எனவே விஐபி கடிதம் மூலம் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்க ஆர்ஜித சேவை கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்ஜித சேவை கட்டண உயர்வுக்கு தெலுங்குதேசம், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பதி தேவஸ்தானம் தற்போது பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவதை விட பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே தரிசனம் கிடைக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது. ஆர்ஜித சேவை கட்டணத்தை உயர்த்தி வியாபாரமாக்கி வருகிறது.
ஆர்ஜித சேவை கட்டணத்தை உயர்த்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.