இயக்குநர் விக்னேஷ் சிவன் தோனியை வைத்து ஒரு ஸ்பெஷல் வீடியோ இயக்கியிருக்கிறார். தோனியின் பரம ரசிகரான விக்னேஷ் சிவன் அது பற்றி ஒரு பதிவும் வெளியிட்டிருக்கிறார்.
“என் அம்மாதான் சென்னைக்கு வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு பொறுப்பில் இருந்தார். அதனால் எனக்கு விளையாட்டு வீரர்கள் பலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களோடு அருகில் சென்று பேசும் வாய்ப்பும் வந்தது. அதற்கு என் அம்மாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். நான் அம்மா செல்லும்போது அவர் பின்னாடி சென்று தோனியை தொலைவிலிருந்து ரசிப்பேன். அவர் கடுமையான பாதுகாப்பில் இருந்ததால் என்னால் மிக அருகில் சென்று பார்க்கவோ, பேசவோ முடியவில்லை. தோனியின் அணுகுமுறையும், அவர் தன் அணியினருடன் சேர்ந்து பணியாற்றும் விதமும், வேலை வாங்கும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு பரபரப்பான சூழ்நிலை என்றாலும் அவர் முகத்தில் நான் அமைதியைப் பார்ப்பேன். நான் பிற்பாடு இயக்குநர் ஆனப்பிறகு அவரது முறையைத்தான் பின்பற்றினேன்.
அம்மா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தாலும் என்னால் தோனியை அணுக முடியவில்லை. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் என்னை தோனியை வைத்து ஒரு வீடியோ செய்யச் சொன்னார்கள். என்னையே நான் நம்பவில்லை. அவரை இயக்குவதை நான் ரொம்பவும் விருப்பமாகச் செய்தேன். அவருக்கு 36 தடவைகளுக்கு மேலாக ‘ஆக்சன்’ சொன்னேன். இடைவேளையின்போது அம்மாவோடு அவர் இருக்கும் படத்தைக் காட்டினேன். என் அம்மாவை அழைத்து வந்து சந்திக்க வைத்தேன்.
ஆகப்பெரிய நல்ல கணங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. நான் மனப்பூர்வமாக நினைத்தது எல்லாம் நடந்திருக்கின்றன. தோனியுடன் உரையாட கிடைத்த இந்தத் தருணங்களை ஞாபகத்தில் வைத்திருப்பேன். என்னை ஆசிர்வதித்த தேவதைகளுக்கு நன்றி” என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு இருக்கிறார்.